ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த வெண்கல வளையல்கள் : கீழடி போவ் கவனம் பொறுமா ஆதிச்சநல்லூர்?

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த வெண்கல வளையல்கள் : கீழடி போவ்  கவனம் பொறுமா ஆதிச்சநல்லூர்?

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதல் முறையாக குழந்தைக்கான முதுமக்கள் தாழியில் வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய தொல்லியல் துறையின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக தொடரும் அகழாய்வில் ஏற்கனவே சங்ககால பாண்டிய மன்னர்களின் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குழந்தைகளின் அணிந்து கொள்ளும் வெண்கல வளையல்கள் கிடைத்திருக்கிறன.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். முதன்முதலாக 1876-ல் அகழாய்வுகள் நடந்துள்ளன. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 2004ல் மத்திய தொல்லியல்துறை சார்பில் நடத்தப்பட்ட அகழாய்வு திருப்பு முனையாக அமைந்தது. 169 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கலப் பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட இருக்கின்றன.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய்தபோது வெண்கல வளையல்கள் கிடைத்துள்ளன. 30 செ.மீ. அகலம், 58 செ.மீ. உயரம் கொண்ட அந்த முதுமக்கள் தாழியில், குழந்தையின் மண்டை ஓடு, கை எலும்புகள் இருந்தன. 4 வெண்கல வளையல்களும் இருந்தன. அவற்றில் இரு 4 அடுக்கு வெண்கல வளையல்களும் கிடைத்துள்ளன.

3.5 செ.மீ. விட்டமும், 0.2 செ.மீ. கன அளவும், 22 கிராம் எடையும் கொண்ட வளையல்கள் மிக முக்கியமான கண்டுபிடிப்ப்பாக பார்க்கப்படுகிறது. வெண்கல வளையலானது உயர் வெள்ளீயம் கலந்து தயாரிக்கப்பட்டு இருந்தது. முதுமக்கள் தாழியில் வைக்கப்பட்டு இருந்த குழந்தைக்கு 5 முதல் 8 வயது வரையிலும் இருக்கலாம் என்றும், முதல் முறையாக குழந்தைக்கான முதுமக்கள் தாழியும் அதில் வெண்கல வளையல்களும் கிடைத்திருக்கின்றன.

இன்னொரு முதுமக்கள் தாழியில் வயதான ஒருவரின் மண்டை ஓடு, கை கால் எலும்புகள் இருந்தன. மேலும் குவளை, கிண்ணம், தட்டு போன்ற மண்பாண்ட பொருட்களும், 2 வெண்கல வளையல்களும் இருந்தன. வளையல்கள் ஒவ்வொன்றும் 5.5 செ.மீ விட்டமும், 0.5 செ.மீ கன அளவும், 24 கிராம் எடையும் கொண்டதாக இருந்தன. அகழாய்வில் கிடைத்த பொருட்கள் விரைவில் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் தமிழக அரசால் கட்டப்பட்ட அருங்கட்சியகம் போல் ஆதிச்சநல்லூரில் வரவிருக்கும் அருங்காட்சியகமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துள்ளன. கீழடியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் இரண்டு லட்சம் பேர் பார்வையிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு தயாராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com