
பாரத் ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சி.யான கவிதா கல்வகுன்ட்லா சனிக்கிழமை தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த தொண்டர்கள் பதறிப்போனார்கள்.
தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ். இவரது மகள் கவிதா. பி.ஆர்.எஸ். கட்சியின் (பாரத் ராஷ்டிர சமிதி) எம்.எல்.சி.யாக இருந்து வருகிறார்.
தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இது அந்த மாநிலத்தில் நடைபெறும் மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலாகும். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிஜோரம் தேர்தலுடன் தெலங்கானா தேர்தலும் நடந்து முடிந்தவுடன் டிசம்பர் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கடந்த இரண்டு முறை நடைபெற்ற தேர்தலில் பி.ஆர்.எஸ். (முன்பு தெலங்கானா ராஷ்டிர சமிதி) அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. மூன்றாவது முறையும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என்று முதல்வர் கே.சி.ஆர். மற்றும் அவரது ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சி மும்முனை போட்டியை சந்திக்கிறது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வும் தேர்தல் களத்தில் உள்ளன.
இந்த நிலையில் பி.ஆர்.எஸ். கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல்வரின் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதா, சனிக்கிழமை இதிக்யால் என்னுமிடத்தில் திறந்த வேனில் பிரசாரம் செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் பதறிப்போனார்கள்.
பின்னர் அருகிலிருந்து தொண்டர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அதன் பின் அவர் சகஜநிலைக்குத் திரும்பினார். இது தொடர்பாக அவர் விடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம். எனது உடல்நிலை நன்றாகவே இருக்கிறது.
உடலில் நீர்த்தன்மை குறைந்துபோனதால் (டீ ஹைட்ரேஷன்) மயக்கம் ஏற்பட்டது. இப்போது சரியாகவிட்டது. தொண்டர் வீட்டில் அழகான குழந்தையை சந்தித்து எனது நேரத்தை செலவிட்டேன். நான் இப்போது புத்துணர்வுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.