

புருனே நாட்டின் இளவரசர் அப்துல் மதீன் இப்னி ஹஸ்ஸனல் போல்கியா, சாதாரண பெண்ணும் தனது காதலியுமான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை திருமணம் செய்துகொண்டார். மிகவும் ஆடம்பரமாக நடந்த இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வெளிவந்துள்ளது.
புருனே நாடு எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டின் மன்னராக இருப்பவர் சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா. இவரின் 10-வது மகனும், இளவரசருமான அப்துல் மதீன், அரச குடும்பத்தைச் சாராத தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை (ஜன.11) திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம், தலைநகர் பந்தர் செரி பெகவானில் உள்ள மசூதியில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது.
இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமண விழா ஜனவரி 7ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது. திருமண நிகழ்ச்சிகள் 1,788 அறைகள் கொண்ட அரண்மனையில் நடைபெற்றது.
உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரும், ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய செல்வந்தருமாக இருந்தவர் புருனே சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா. இவரது மகனும் இளவரசருமான 10-வது மகன் தான் அப்துல் மதின். புருனேயின் இளவரசர் அப்துல் மதின் அந்நாட்டின் விமானப் படை பைலட்டாகவும் இருந்து வருகிறார்.. போலோ விளையாட்டிலும், குத்துச்சண்டை விளையாட்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
புது மணப்பெண் அனிஷா ஆடை வடிவமைப்பு (பேஷன் டிசைன்) துறையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அனிஷாவின் தாத்தா, மன்னருக்கு ஆலோசராக இருந்தவர் என்று சொல்லப்படுகிறது. ஊடகங்களில் பிரிட்டனின் இளவரசர் ஹாரியுடன் ஒப்பிடப்படும் மதின், ‘ஹாட் ராயல்’ என அன்போடு அழைக்கப்படுகிறார். ஜனவரி 14 ஆம் தேதி, அரச குடும்ப வாகனத்தில் புதுமணத் தம்பதிகள் வீதியில் வலம் வருவார்கள்.
அப்போது இந்த தம்பதிக்கு அனைவரும் வாழ்த்து கூறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மிக பிரமாண்டமாக நடக்கவுள்ள திருமண ஊர்வலத்தையும், மணமக்களையும் நேரில் காண அந்நாட்டு மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மதீன்-அனிஷா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு அக்டோபரில் சுல்தான் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.