கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்திருந்த்து.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த்தும் வாக்குறுதி அளித்தபடி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டத்தை கடந்த மாதம் 11 ஆம் தேதி அமல்படுத்தியது. இதனால் ஏராளமான பெண்கள் அரசு பேருந்தில் இலசவமாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தார்வார் மாவட்டம், குந்துகோல் தாலுகா சம்சி பேருந்து நிலையத்தில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அவரது உருவ அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சில பெண்கள் அவர் அருகே சென்று பர்தாவை நீக்கி முகத்தை காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டனர். இதற்கு அவர் மறுக்கவே, சில பெண்கள் வலுக்கட்டாயமாக அவரது பர்தாவை விலக்கினர். அப்போதுதான் அவர் பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்காக பர்தா அணிந்து வந்ததாக அவர் கூறினார்.
இதையடுத்து அந்த பெண்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் விஜயபுரா மாவட்டம், சிந்தகி கோடகேரியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் வீரபத்ரைய்யா (வயது 40) என்பதும் தெரியவந்த்து. பர்தா அணிந்து இலவசமாக பயணித்து பேருந்தில் பெங்களூரு வழியாக தார்வார் வந்துள்ளார்.
ஆனால், அவரிடம் பெண் புகைப்படத்துடன்கூடிய ஆதார் அட்டை நகல் இருந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இலவச பயணத்துக்காக பர்தா அணிந்து வந்தாரா அல்லது பஸ்களில் பெண்களிடம் நகை பறிக்கும் நோக்கில் மாறுவேடத்தில் வந்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.