மத்தியப்பிரதேச மாநிலம், கார்கோன் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பாலத்தின் மீது பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பாலத்தின் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்தப் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பாலத்தில் பயணித்த பேருந்து கவிழ்ந்து விழுந்து பயணிகள் 15 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சோக சம்பவத்துக்கு மத்தியபிரதேச அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து இருப்பதோடு, இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்க மத்தியப்பிரதேச அரசு உத்தரவிட்டு இருக்கிறது. மேலும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்துக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 25,000 ரூபாய் நிவாரணமாக வழங்கவும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.