குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் பிரபல தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் பிரபலம்!

குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும்  பிரபல தொழிலதிபர் மற்றும் கிரிக்கெட் பிரபலம்!

ஒடிசாவில் மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க உள்ளதாக தொழில் அதிபர் அதானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீர் வீரேந்திர ஷேவாக் ஆகியோர் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளனர் இந்த நற்செய்தி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின. வெறும் 20 நிமிடங்களில் இந்த கொடூர நிகழ்வுகள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டன. கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான ஒரு விபத்தாக இது கருதப்படுகிறது.

மிகக் கொடூர ரயில் விபத்தான இதில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். இதனால் அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே குழந்தைகளுக்கான கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் என்று அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒடிசா ரெயில் விபத்தால் நாம் அனைவரும் மிகவும் வேதனை அடைந்துள்ளோம். இந்த விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பள்ளிக் கல்விக்கான செலவை அதானி குழுமம் ஏற்றுக் கொள்வது என முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிப்பதும், அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு" என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், ஒடிசா ரயில் விபத்தில் பலியான பெற்றோர்களின் குழந்தைகள் கல்வியை கவனித்துக் கொள்வது தான் என்னால் செய்யக் கூடியது. அவர்களுக்கு ஷேவாக் இன்டர்னேஷனல் பள்ளியில் உறைவிட வசதியுடன் கூடிய இலவச கல்வியை வழங்க உள்ளேன் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com