
வருடந்தோறும் உயரும் வாடகைச் சுமை, இடமாற்றத்தின் வலி, நிரந்தரமற்ற வாழ்வு. இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு முடிவுகட்ட, 'ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குங்க... வீட்டை சொந்தமாக்குங்க' என்ற எளிய நம்பிக்கையை விதைத்தது மும்பை மாநகராட்சி (பி.எம்.சி - Brihanmumbai Municipal Corporation).
மும்பையில் சொந்த வீடு என்பது பெரும் கனவாக இருக்கும் நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சி, அடித்தட்டு மற்றும் குறைந்த வருமானக் குழுக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
பி.எம்.சி-யின் வரலாற்றிலேயே முதல்முறையாக 426 மலிவு விலை வீடுகளை லாட்டரி மூலம் வழங்கும் இந்தத் திட்டம், பலரின் வாழ்நாள் கனவை நிறைவேற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அதிகாரப்பூர்வ திட்டமாகப் பார்க்கப்பட்டது.
இது மும்பைக் குடியிருப்பாளர்களுக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டது. வீட்டு வசதி இல்லாத நலிவடைந்த பிரிவினரின் (EWS) சொந்த வீடு கனவை நனவாக்குவதே இதன் நோக்கம் என்பதால், இது மகத்தான வரவேற்பைப் பெற்றது.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சம் வரை) மற்றும் குறைந்த வருமானக் குழுக்களுக்கு (ஆண்டு வருமானம் ரூ. 9 லட்சம் வரை) எனப் பயனாளிகள் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.
இத்தகைய உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று (புதன்கிழமை) விண்ணப்பங்கள் ஏற்கத் துவங்கியபோது, எதிர்பாராத இணையப் போக்குவரத்து (overwhelming traffic) காரணமாக, நாள் முழுவதும் இணையதளம் செயலிழந்து காணப்பட்டது. இதனால், விண்ணப்பதாரர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறுக்குக் காரணம் என்ன?
மும்பையின் பண்டுப், காஞ்சூர்மார்க், பைகுல்லா, அந்தேரி கிழக்கு, மஜாஸ் மற்றும் தஹிசார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்காக இந்த லாட்டரி நடத்தப்படுகிறது.
புதன்கிழமை (அன்று) விண்ணப்பங்கள் ஏற்கத் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
லாட்டரியை நடத்தும் பி.எம்.சி-யின் எஸ்டேட் துறையின் அதிகாரிகள், இந்தத் தொழில்நுட்பச் சிக்கலை ஒப்புக்கொண்டனர்.
பொதுமக்களின் எதிர்பாராத அதிகப்படியான வரவேற்பே இணையதளம் முடங்கியதற்குக் காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
"பொதுமக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு எங்களின் எதிர்பார்ப்பை மீறிவிட்டது. இதனால் தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எங்கள் பொறியாளர்கள் இந்தச் சிக்கலைத் தீர்க்க தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர், விரைவில் இணையதளம் செயல்படும் என்று நம்புகிறோம்," என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் கொந்தளித்த பொதுமக்கள்
இணையதளத்தை நாள் முழுவதும் அணுக முடியாமல் போனதால், மும்பை முழுவதும் உள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
வோர்லியைச் சேர்ந்த சந்தோஷ் மிஸ்ரா இது குறித்துப் பேசுகையில், "நான் காலையிலிருந்து இணையதளத்தை அணுக முயற்சித்தேன்.ஆனால் அது வேலை செய்யவில்லை.
பி.எம்.சி இவ்வளவு அதிக தேவையை எதிர்பார்த்து, அதற்கேற்பத் தயாராகியிருக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் வீணாகிவிட்டது" என்று கூறினார்.
சமூக ஊடக தளங்களிலும் அதிருப்தியடைந்த குடிமக்களின் எதிர்வினைகள் அலைமோதின. தானேவைச் சேர்ந்த சதீஷ் ஷிண்டே, "நான் காலையில் இருந்து மாலை வரை இணையதளத்தை அணுக முயன்றும் முடியவில்லை.
இந்தச் சிக்கல் குறித்து சமூக ஊடகங்களில் பி.எம்.சி தகவல் தெரிவித்திருக்க வேண்டும்" என்று குறை கூறினார்.
இந்த லாட்டரியில் வழங்கப்படும் வீடுகளின் விலை ரூ. 54 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பி.எம்.சி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) ஆண்டு வருமான வரம்பை ரூ. 6 லட்சம் என்றும், குறைந்த வருமானக் குழுக்களுக்கு (LIG) ரூ. 9 லட்சம் என்றும் நிர்ணயித்துள்ளது.
ஆனால், இந்த வருமானக் குழுக்களை இலக்காகக் கொண்டுள்ள வீடுகளின் விலை குறித்து விமர்சகர்கள் கவலை எழுப்புகின்றனர்.
உதாரணமாக, பைகுல்லாவில் உள்ள ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 1.01 கோடி முதல் ரூ. 1.06 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இந்த வருமான வரம்புக்குட்பட்ட குழுமினர் இத்தகைய விலையுள்ள வீடுகளுக்குக் கடன் பெறுவதற்கு சிரமப்படுவார்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
குறிப்பாக, ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் மட்டுமே ஈட்டும் ஒரு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS), குறைந்தபட்ச விலையான ரூ. 54 லட்சம் வீட்டை வாங்குவதற்கே மிக அதிக வீட்டுக் கடனைப் பெற வேண்டியுள்ளது.
வங்கிகள் பொதுவாக அவர்களின் வருமானத்தில் 40 முதல் 50 சதவீதத்தை மட்டுமே மாதத் தவணையாக (EMI) செலுத்த அனுமதிக்கும் நிலையில், இந்த விலைகள் அவர்களின் வாங்கும் சக்திக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகவே உள்ளன.
முக்கியத் தேதிகள்
லாட்டரிக்கான விண்ணப்பங்களை http://bmchomes.mcgm.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவம்பர் 14 வரை சமர்ப்பிக்கலாம். இந்தத் திட்டம் குறித்தும் மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
லாட்டரி குலுக்கல் நவம்பர் 20 அன்று நடைபெற உள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு வருவதால், விண்ணப்பதாரர்கள் மேலும் ஏதேனும் அறிவிப்புகள் இருந்தால் அதிகாரப்பூர்வத் தகவல்கள் மூலம் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.