2030ல் மனிதர்கள் சாகாவரம் பெறுவார்கள்.

2030ல் மனிதர்கள் சாகாவரம் பெறுவார்கள்.
Published on

றப்பதைப் பற்றி கவலைப்படாமல் நீண்ட காலம் வருடக் கணக்கில் வாழலாம் என நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? இதுவரை சாகாவரம் என்பது பலரின் கருத்துக்களாக மட்டுமே இருந்து வருகிறது. ஆனால் கூகுளின் முன்னாள் ஊழியர் இது சாத்தியம் என சொல்கிறார். 

கூகுளின் முன்னாள் பொறியாளரான 'ரே க்ரூஸ்வீல்' என்பவர் இன்னும் ஏழு ஆண்டுகளில் மனிதர்கள் சாகா வரம் பெற்றவர்களாக மாறிவிடுவார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் கணிப்பு ஒன்றைக் கூறியுள்ளார். இதுவரை அவர் செய்த 147 கணிப்புகளில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது. எனவே இவருடைய பல கணிப்புகள் உண்மையாகி விட்ட நிலையில், 2005 ஆம் ஆண்டு தனது புத்தகமான "தி சிங்குலாரிட்டி இஸ் நியர்’’ல் அவர் கூறிய சில விஷயங்களை Adagio என்ற Youtube சேனல் இரண்டு பாகமாக வெளியிட்டது. இதில் அவர் கூறியுள்ள கருத்துக்கள் சமூக ஊடகங்களில் சாகாவரம் பற்றிய விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. 

அந்த புத்தகத்தில் 2030க்குள் மனிதர்கள் சாகாவரம் என்ற நிலையை அடைந்து விடுவார்கள் எனவும், இது நானோ டெக்னாலஜி மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தால் சாத்தியமாகும் என்றும் கூறியிருக்கிறார். 2029 ஆம் ஆண்டில் மனிதர்களுடைய திறன்களை முழுமையாக எட்டும் தன்மைகொண்ட AI தொழில்நுட்பம் வெற்றி பெறும் எனவும், 2045-ல் மனிதர்களின் திறமையும் மீறி AI தொழில்நுட்பம் செயல்படும் எனவும், 2017 இல் நடந்த "பியூச்சரிசம்" என்ற நிகழ்வில் அவர் தெரிவித்துள்ளார். 

இவருடைய கணிப்புப்படி, சிறிய நானோ ரோபாட்டுகள் (Nanobot) மனிதர்களின் சேதமடைந்த செல்கள் மற்றும் திசுக்களை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே இருக்கும் எனவும், இவை நமக்கு வயதாவதைத் தடுத்து எப்போதும் இளமையாகவே வைத்திருக்கும் எனவும் கூறியுள்ளார். இவர் இதுபோன்ற கணிப்புகளை சொல்வது இது முதல் முறை அல்ல. 1990 ஆம் ஆண்டில் உலகின் தலைசிறந்த செஸ் வீரர் 2000 ஆண்டிற்குள்ளாக கணினியிடம் தோற்றுவிடுவார் என்று கணித்திருந்தார். இது 1997ஆம் ஆண்டு உண்மையானது. 

பின்னர் 1999ஆம் ஆண்டில், 2023 ஆம் ஆண்டளவில் 1000 டாலர்கள் மதிப்புள்ள மடிக்கணினி மனித மூளையின் சேமிப்புத்திறன் மற்றும் மற்ற திறன்களைக் கொண்டிருக்கும் என்று மற்றொரு கணிப்பு செய்தார். அது கிட்டத்தட்ட தற்போது உண்மையாகிவிட்டது. மேலும் 2010 ஆம் ஆண்டில் உலகின் பெரும்பாலான பகுதிகள் வயர்லெஸ் இணைய சேவையைப் பெற்றிருக்கும் எனக் கணித்திருந்தார். இதுவும் மெய்யானது. 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு சிலிக்கான் பள்ளத்தாக்கிலுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே செயற்கை நுண்ணறிவு சார்ந்த கடுமையான போட்டி நிலவும் என்று கணித்தபடியே தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 

இவருடைய பல கணிப்புகளும் நிஜமாக மாறிய நிலையில், இன்னும் 7 ஆண்டுகளில் மனிதன் சாகாவரம் பெறுவான் என்ற கணிப்பும் உண்மையாகுமா என பலரும் கேட்டு வருகின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com