Raveendhiran
Raveendhiran

சரிந்தது சாம்ராஜ்யம்... கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட Byju's நிறுவனர்!

ஏப்ரல் 1ம் தேதி Forbes Billionaires list வெளியானதைத் தொடர்ந்து Byju's நிறுவனத்தின் உண்மை நிலை தற்போது தெரியவந்துள்ளது. சென்ற ஆண்டு இந்திய மதிப்பில் 17,545 கோடி சொத்து மதிப்பைக் கொண்டிருந்த பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரனின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு ஜீரோவாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன்:

ரவீந்திரன் பொறியியல் முடித்தப்பிறகு சில ஆண்டுகாலம் வெளிநாட்டில் பணிப்புரிந்தார். இந்தியாவிற்குத் திரும்பிய ரவீந்திரன் CAT தேர்வு எழுதினார். இந்தத் தேர்வில் ரவீந்திரன் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். அதன்பின்னரே நண்பர்களின் உதவியுடன் மாணவர்களுக்குத் தேர்வு பயிற்சி அளிக்கத் தொடங்கினார். இரு ஆசிரியர்களுக்கு மகனாகப் பிறந்த இவருக்கு இந்தப் பயிற்சி மையம் மிகவும் ஊக்கமளிப்பதாகவே இருந்தது. கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் 100 மாணவர்களுடன் ஆரம்பித்த இந்த பயிற்சி மையத்தில் பிற்பாடு 1000க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற ஆரம்பித்தனர்.

2011ம் ஆண்டு ஒரு குழுவுடன் இணைந்து மாணவர்களுக்குத் தொழில்நுட்பம் வாயிலாகப் பயிற்சியளிக்க ஆரம்பித்தார், ரவீந்திரன். அந்தவகையில்தான் அந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி Byju's App ஆக மாறியது. ஆம்! 2015ம் ஆண்டு Byju's App அறிமுகம் செய்யப்பட்டது. வெறும் மூன்றே மாதங்களில் இந்தச் செயலியை இந்தியா முழுவதும் 2 மில்லியன் பேர் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

குறுகிய காலத்தில் பெரிய வெற்றி அடைந்ததன் ரகசியம்!

பைஜூஸ் செயலியில் அணுகுமுறைகள், பயன்பாடு, அனிமேஷன் வீடியோக்கள், கேம்கள், வினாடி வினா போன்ற பல முறைகள் கொண்டுவரப்பட்டன. இதனால் கற்பவர்கள் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இதனால் சென்ற ஆண்டு கணக்குப்படி பார்த்தால் 100 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பைஜூஸைப் பயன்படுத்தினார்கள். அதில் 6.5 மில்லியன் பயனாளர்கள் கட்டணம் செலுத்திப் பயன்படுத்துபவர்கள். இந்தச் செயலியை வருடந்தோறும் 85 சதவீத அளவு புதுப்பிக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் அதிகப்பேர் வீட்டிலிருந்தே கற்றதால் அப்போது பைஜூஸ் செயலியின் பயன்பாடு உச்சத்திற்குச் சென்றது. 2020ம் ஆண்டில் பார்க்கும்போது பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.

பைஜூஸின் வீழ்ச்சி:

இப்படி நன்றாக சென்றுக்கொண்டிருந்த பைஜூஸ் 2023ம் ஆண்டிலிருந்து வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது. இன்னும் சொல்லப்போனால் 2022ம் ஆண்டின் பாதியிலிருந்தே சில பிரச்சனைகள் வர ஆரம்பித்தன. கணக்கு முறைகேடுகள், பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, தவறான நிர்வாக அணுகுமுறை, நிர்வாகக் குழு உறுப்பினர்களின் அடுத்தடுத்த விலகல் என படிப்படியாக சிக்கல்கள் வர ஆரம்பித்தன.

இவையனைத்தும் ஒருபுறம் என்றால், மறுபுறம் பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால் ரவீந்திரனின் வீடு உட்பட அவருக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது.

சோதனையில் 2011ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலத்தில் ரூ.28 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை பைஜூஸ் நிறுவனம் கொண்டு வந்தது தெரிய வந்தது. மேலும் அமலாக்கத்துறை சோதனையில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பைஜூஸும் ரூ. 9,754 கோடியை அனுப்பியதுத் தெரியவந்தது.

இதற்கான உரிய ஆவணங்களையும் இந்த நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை. அதேபோல் ரூ. 9, 362 கோடிக்கு அந்நிய செலாவணி மோசடியில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது. இப்படி பல அடிகளை அடுக்கடுக்காக வாங்கிய பைஜூஸ் நிறுவனம் தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வந்தது.

ஓராண்டாக இப்படி பல சிக்கல்களில் மாட்டிக்கொண்ட பைஜூஸ் ஆன்லைனில் கல்வி கற்போர் ரீதியாகவும் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதனால் மூலதன செலவு அதிகமாகி, பணி நீக்கமும் செய்யப்பட்டது. இந்தநிலையில் முதலீட்டாளர்களுக்கும் ரவீந்திரனுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், கடந்த பிப்ரவரி மாதம் முதலீட்டாளர்களும் வெளியேறிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக மீதமிருந்த பல ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஏன்! சமீபத்தில் கூட பெங்களூருவில் உள்ள பைஜூஸின் பிரம்மாண்ட அலுவலகத்திற்கு பணம் செலுத்த முடியாமல் காலி செய்தது.

இதையும் படியுங்கள்:
முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் 33 ஆண்டுகள் அரசியல் பணிக்குப் பின் ஓய்வு பெற்றார்!
Raveendhiran

இதன் காரணமாகத்தான் கடந்த ஆண்டு ரூ 17,545 கோடியாக இருந்த ரவீந்திரனின் சொத்து மதிப்பு தற்போது பூஜ்ஜியமாக மாறியுள்ளது.

ஃபோர்ப்ஸ் பில்லியனயர் பட்டியலின் அறிக்கைப் படி ரவிந்திரன் உட்பட நான்கு பேர் பில்லினயர் பட்டியலிலிருந்து வெளியேறி உள்ளார்கள். சென்ற ஆண்டு $22 பில்லியனுடன் பட்டியலில் இருந்த ரவீந்திரனின் சொத்து மதிப்பு தற்போது $1 பில்லியனாகக் குறைந்துப் பட்டியலில் இருந்து வெளியேறிவுள்ளார். ஆக, உலகளவில் தற்போது பில்லினயர் பட்டியலில் 2,781 பேர் உள்ளனர். சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பட்டியலில் 141 பேர் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com