கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை, 11:45 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடை பெற இருக்கிறது.
டெல்லியில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக்கு பின், இறுதி செய்யப்பட்ட பட்டியல் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பப் பட்டுள்ளது. ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இன்று அமைச்சரவை விரிவாக்கமும் பதவியேற்பு விழாவும் நடைபெற இருக்கிறது.
கர்நாடக சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் கடந்த 20ம் தேதியன்றே பதவி ஏற்று கொண்டனர். அவர்களுடன் பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகிய 8 அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்.
இதுவரை அமைச்சர்களுக்கு எந்த துறையும் ஒதுக்கப் படவில்லை. மீதமுள்ள 24 அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. அமைச்சரவையில் மீதம் இருக்கும் இடங்களுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுலை, சித்தராமையா, சிவகுமார் நேற்று காலை சந்தித்து, அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று காலை பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், 11:45 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மகாதேவப்பா, எச்.கே.பாட்டில், மது பங்காரப்பா உள்ளிட்டோர் பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.