ஏடிஎம் கொள்ளைக்கு பின் சோதனை சாவடிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா!

ஏடிஎம் கொள்ளைக்கு  பின் சோதனை சாவடிகளில்  நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கு பின் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது சோதனை சாவடிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்துக்குப்பின், வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணிக்கு காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி முத்துச்சாமி, மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஒரு உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் பணியில் இருந்தனர். தற்போது காவலர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் சோதனைச் சாவடிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று கூறியுள்ளார்.

மேலும், சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தும் பொருட்டு அங்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வங்கிகள், ஏடிஎம் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் பொருத்தவும், காவலாளிகளை நியமிக்கவும் வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வேலூர் சரகத்தில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் தொடக்கமாக விபத்து நடக்கும் இடங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. எதனால் விபத்து நடந்தது, விபத்துக்கான காரணம், விபத்தைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சாலைகள் சீரமைப்பு குறித்து உரிய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, விபத்துகளை தவிர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளதாக கூறினார். சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள், மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையை முற்றிலும் தவிர்க்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதகாவும் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com