கேமராக்கள் செயல் இழப்பு... குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம். காவலர்களுக்குத் திண்டாட்டம்!

கேமராக்கள் செயல் இழப்பு... குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம். காவலர்களுக்குத் திண்டாட்டம்!
Published on

றிவியல் முன்னேற்றத்தின் சான்றுகளில் ஒன்றுதான் சி சி  டி வி கேமராக்கள் எனப்படும் கண்காணிப்புக் கேமராக்கள். வீட்டின் பாதுகாப்பு முதல் அலுவலகத்தின் செயல்பாடுகள் வரை அனைத்தையும் அறிய உதவுகிறது இந்த கேமராக்கள். அலுவலகத்தில் வேலை செய்யாமல் இருப்பவர்களை முதலாளிகளுக்கு காட்டித் தருவதும், திருட்டு கொள்ளை கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை காவல்துறைக்கு காட்டித் தருவதிலும் கில்லாடி கேமராக்கள் இவை. சில அறிவு மிக்க திருடர்கள் பிளான் செய்து அந்தக் கேமராக்களை சேதப்படுத்திவிட்டு பின் கொள்ளை சம்பவத்தை நடத்துவதும் உண்டு. ஆனால் காவல்துறையால்  பொருத்தப்பட்ட கேமராக்களே செயலிழந்து போனால்? எங்கு?

சேலம் மாநகர்  பகுதியில்தான். 3 ஆயிரத்து 50 கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதிகளில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு  பிடிக்கவும் மாநகர காவல்துறை  சார்பில் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்  தனியார் பங்களிப்புடன் அதிக மக்கள் வந்து செல்லும் இடங்களான உணவகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களிலும்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதன்படி மாநகர் பகுதியில் மட்டும் 21,000க்கும்  மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோன்று சேலத்தில் உள்ள  தேசிய நெடுஞ்சாலை களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த நிலையில் சமீப காலமாக சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவலர்கள்  பார்வையிட்டனர். அவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. ஆம்  பல கண்காணிப்பு கேமராக்களில்  எந்தவித காட்சியும் பதிவாகாமல் இருப்பதைக் கண்டு பிடித்தனர். தொடர்ந்து  அவர்கள் நடத்திய ஆய்வில் மாநகர்  பகுதியில் பொருத்தப்பட்டு இருப்பதில் 2,525 கேமராக்கள் கடந்த ஆறு மாதமாக செயல்படாமல் இருப்பது தெரிந்தது. அதேபோன்று  525 கேமராக்கள் பதிவுகளை சேமிக்கும் திறனை இழந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி மொத்தம் 3 ஆயிரத்து 50 கேமராக்கள் செயலிழந்திருப்பது தெரியவந்துள்ளது. பழுதடைந்த கேமராக்களை சரி செய்யும் நடவடிக்கையில் மாநகர காவலர்கள்  ஈடுபட்டு உள்ளனர் 

“எங்கள் தெருவிலும்தான் சி சி டி வி கேமராவைப் பொருத்திட்டுப் போனாங்க. இதுவரை அது வேலை செய்யற மாதிரி தெரியல. அப்படியே இதையெல்லாம் வந்து பார்த்து சரி செய்தா திருட்டுப் பயம் இல்லாம இருப்போம்” என்கிறார் சேலத்தில் வசிப்பவர் ஒருவர். காவல்துறையினர் கவனத்திற்கு இதுவும் சென்றால் மகிழ்ச்சி. சேலம் மட்டுமல்ல எங்கு எனினும் கேமராக்கள் வைப்பது அழகிற்கு அல்ல. அது பயன்பாட்டில் இல்லை என்றால் அது இருந்து என்ன பயன்? ஆகவே கண்காணிப்புக் கேமராக்களை அவ்வப்போது பராமரிக்க வேண்டியது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com