ரிலையன்ஸ் நிறுவனம் செயல்படாத கேம்ப கோலா பிராண்டை புது தில்லியைச் சேர்ந்த ப்யூர் டிரிங்க்ஸ் குழுமத்திடமிருந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் 22 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது. ரிலையன்ஸ் இப்போது Campa Cola, Campa Lemon மற்றும் Campa Orange உள்ளிட்ட மூன்று சுவைகளில் Campa பிராண்டை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் Campa லோகோவை பிரகாசமான புதிய வண்ணங்கள் மற்றும் நவீன எழுத்துருவுடன் மறுபெயரிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் எஃப்எம்சிஜி பிரிவு, ஐகானிக் குளிர்பான பிராண்டான கேம்பகோலாவை மீண்டும் இந்திய சாஃப்ட் ட்ரிங்க் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. கம்ப கோலா இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாகின்றன. இப்போது மீண்டும் ரிலையன்ஸ் மூலமாக, புதிதாகச் சேர்க்கப்பட்ட இரண்டு சுவைகளுடன் கேம்பா கோலாவை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்தது. ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டின் எஃப்எம்சிஜி பிரிவு மற்றும் முழு உரிமையுள்ள துணை நிறுவனமான ரிலையன்ஸ் நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (ஆர்சிபிஎல்) மூலம் கேம்பா தொடங்கப்படுகிறது.
வளமான பாரம்பரியம் கொண்ட உள்நாட்டு பிராண்டுகளை ஊக்குவிக்கும் ரிலையன்ஸின் வியாபார உத்திகளுக்கு ஏற்ப இந்தப் புதிய அறிமுகமானது நுகர்வோருடன் ஆழமாக வேரூன்றி அதன் சுவை மூலமாக நீடித்து நிற்கப்போகிறது. இதன் மூலமாக சாஃப்ட் ட்ரிங்க் துறையில் நுகர்வோருக்கு தலைமுறைகள் கடந்து ஒரு புதிய சுவை அனுபவத்தை அறிமுகப்படுத்தப் போகிறோம் என RCPL செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
80 களில் மக்களிடையே வெகு பிரபலமாக புழக்கத்தில் இருந்த சாஃப்ட் ட்ரிங் பிராண்டுகள் தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட், கேம்பா கோலா இவை மூன்றும் தான். இவற்றில் 90 களில் கோகோ கோலா, பெப்ஸி அறிமுகத்தின் பின் கேம்பா கோலா கொஞ்சம் கொஞ்சமாக இந்திய மார்க்கெட்டில் பின்னடையத் தொடங்கியது. காரணம் சுவை குறைவு என்பதல்ல. பியூர் ட்ரிங்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரப் பிரச்சனைகளால் கேம்பா கோலா மேலெழும்ப முடியாமல் பின்னடைந்து விட்டது. கோகோ கோலாவுக்கு இருந்த விளம்பர யுக்தி மற்றும் தாராள பொருளாதார வசதிகள் பியூர் ட்ரிங்ஸுக்கு கிடையாது. அப்படி இருந்தும் அவர்கள் தங்களது பாரம்பரிய கோலா பிராண்டைத் தூக்கி நிறுத்த பல்வேறு சமயங்களில் முயற்சிக்கத்தான் செய்தார்கள். ஆனால் பருப்பு வேகவில்லை என்பதே நிஜம். பிறகு தான் கேம்பா கோலாவை ரிலையன்ஸ் நிறுவனம் 2022 ல் வாங்கியது. இந்திய அரசின் ஒழுங்குமுறை சட்டங்களின் அடிப்படையில் கோகோ கோலாவும் தற்போது சிரம தசையில் இருப்பதால் கேம்பா கோலா இந்தியச் சந்தைகளில் வலம் வரத் தொடங்கவிருக்கிறது.
இனி மீண்டும் இந்திய இளைஞர்கள், இளைஞிகளுக்குப் புத்துணர்வூட்ட கேம்பா கோலா விளம்பரங்களை அடிக்கடி தொலைக்காட்சிகள் தோறும் கண்டு களிக்கலாம்.