நொறுங்கலாமா ஒரு நூலகம்...???

நொறுங்கலாமா ஒரு நூலகம்...???

“கடை விரித்தோம்... கொள்வாரில்லை.” என்பது பட்டினத்தார் வாக்கு. புத்தக வாசிப்பு அடிப்படையில், ஒரு மிகப் பெரிய அளவிலான வாடகை நூலகத்தின் ஆயுள் இப்போது அப்படித்தான் ஆகிவிட்டது. கோவை மாநகரில் இயங்கி வந்துள்ள “தியாகு வாடகை நூலகம்” ஆனது, வருகிற ஜூன் 3௦ஆம் தேதியுடன் தன்னுடைய இயக்கத்தை நிரந்தரமாக நிறுத்திக் கொள்ளும் என்று அறிவித்துள்ளார் அதன் உரிமையாளர் தியாகராஜன். அவர் பிறந்த ஆண்டில் (196௦), அவரது அப்பா பெருமாள்சாமி என்பவரால் தொடங்கப்பட்டதுதான் “தியாகு வாடகை நூலகம்.”

கோவை தடாகம் சாலையில் கேப்டன் பழனிசாமி லே அவுட் கட்டிடத்தில், ஆரம்பித்து வைக்கப்பட்டதுதான் தியாகு நூலகம். 1980  வரை அப்பா பெருமாள்சாமி, நூலகத்தை நன்கு வளர்ச்சி அடைய வைத்து நிர்வகித்து வந்திருக்கிறார். 1980க்குப் பின்னர் அவரது மகன் தியாகராஜன் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு நூலகத்தினை நிர்வகித்து வந்துள்ளார். சமீபத்திய பத்தாண்டுகளாக சமூக ஊடகங்களின் பரவல் அதாவது மொபைல் போன்களின் பயன்பாடுகள் அதிகம் ஆக அதிகம் ஆக, புத்தகங்களை எடுத்துக் கொண்டு போய் வீட்டில் வைத்துப் படிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து போய் விட்டது. அதனால் நூலக வருவாய் குறைந்து, நூலகக் கட்டிட வாடகைக் கூட கட்ட முடியாத சூழல். இந்நிலையில் தான் தியாகு நூலகத்தினை முழுவதுமாகப் பூட்டி விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூலகத்தில் இப்போது எண்பதாயிரம் புத்தகங்கள் உள்ளன. ஒரு கட்டத்தில் ஐந்தாயிரம் வாசக உறுப்பினர்கள், இதன் இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளனர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் சமூகம், கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், சிறுவர் புத்தகங்கள் என அனைத்து வகையான புத்தகங்களும் உறுப்பினர்களுக்கு தீவிர வாசிப்பினை ஊக்குவித்து வந்துள்ளது. அதெல்லாம் புத்தக வாசிப்பின் ஒரு வசந்த காலம்.

அப்போதெல்லாம் நூலகத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் “சனிக்கிழமை சங்கமம்” என்கிற பெயரில் வாசகர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி வந்துள்ளது தியாகு நூலகம். எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், வண்ண நிலவன் போன்று மேலும் பல எழுத்தாளர்களும் அந்தச் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்று பேசியுள்ளனர். தீவிர இலக்கிய வாசிப்பாளர்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் எனப் பலரும் வாசகர் சந்திப்பு கூட்டத்தில் தவறாமல் வந்திருந்து சிறப்பித்துள்ளனர்.

தியாகராஜன்
தியாகராஜன்

தியாகு நூலகத்தின் வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை, கொரோனா காலத்துக்குப் பின்னர் மிக மிகக் குறைந்து போயுள்ளது. மிகவும் அரிதான இந்த எண்பதாயிரம் புத்தகங்களை சும்மாவே வைத்துக் கொண்டு இப்போதும் சரி இனி வரும் காலத்திலும் சரி என்ன செய்வதென திகைத்துப் போயிருக்கிறார் தியாகராஜன். நீண்ட யோசனைக்குப் பின்னரே நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை வாசகர்கள் கேட்கின்ற விலைக்கு விற்று விடுவது, நூலகத்தையே இழுத்துப் பூட்டி விடுவதென முடிவுக்கு வந்துள்ளார்.

இதனைப் பொது வெளியில் ஒரு அறிவிப்பாகவும் தெளிவு படுத்தியுள்ளார். இந்நிலையில் கோவை தியாகு நூலகத்தின் தற்போதைய நெருக்கடியான சூழல்களை விவரித்தும், தமக்கு நிவாரணமாக பொருளாதார ரீதியில் ஏதேனும் ஒரு ஏற்பாட்டினைச் செய்து விட்டு, இந்த நூலகத்தினை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் வேண்டுகோள் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளார் கோவை தியாகு வாடகை நூலகத்தின் உரிமையாளர் தியாகராஜன்.

தமிழக அரசு தரப்பில் இருந்து இதுவரை அதற்கான எந்தப் பதிலும் வரவில்லை என்பதால், வருகிற ஜூன் 3௦ஆம் தேதியுடன் நூலகத்தினை இழுத்து மூடி விடுவதாக அறிவித்துள்ளார். பல்துறை சார்ந்த பல வகைப்பட்ட மிகவும்  அரிதான எண்பதாயிரம் புத்தகங்களை ஒரு நூலகம் என்கிற ஒரே கூரையின் கீழ் அதாவது ஓரிடத்திலே சேமித்து வைத்து இருப்பதும், அதனை வாசகர்கள் உரிய முறையில் நன்கு பயன்படுத்திக் கொள்வதும் மிகவும் உவப்பானதாகும். “கடை விரித்தோம்... கொள்வாரில்லை” என்கிற பட்டினத்தாரின் வாக்கினைப் பொய்யாக்கிப் புறந்தள்ளி விட்டு, “ஒரு நூலகம் மூடிட விட்டு விடமாட்டோம். நூலகம் இயங்கும். அதன் வாசகர்களே வருக... வருக...” என்று வரவேற்குமா நமது தமிழக அரசு???

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com