ஆன்லைன் ரம்மியை ஒழிக்கவே முடியாதா? - என்ன செய்யப் போகிறது, தி.மு.க அரசு?

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை முழுவதும் தடை செய்ய அவசரச் சட்டத்தை நிறைவேற்றிய தி.மு.க அரசுக்கு எதிராக மத்திய அரசு கிளம்பியிருக்கிறது. இணைய வழி விளையாட்டுகளை முறைப்படி அனுமதி பெற்று நடத்துவது பற்றிய விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அப்படியென்றால், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று பா.ஜ.க ஒப்புக் கொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்னர், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுப்பதற்காக நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. மக்கள் கருத்தும் கேட்கப்பட்டது. விளையாட்டுகளை முறைப்படுத்துவதை விட தடை செய்வது நல்லது என்று ஆணையம் பரிந்துரைத்தது.

ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகளை தடை செய்யும் சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆறு வாரங்கள் கடந்த பின்னரும் தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாததால் அந்த சட்டம் காலாவாதியானது.

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதில் மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. 'ஆன்லைன் விளையாட்டு என்பது 200 மில்லியன் டாலர் சம்பந்தப்பட்டது. இதுவொரு ஸ்டார்ட் அப் தொழிலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது' என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பேசியிருக்கிறார்.

கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளன. ஆனால், விதிமுறைகளை வகுத்து, ஆன்லைன் விளையாட்டுகளை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது .

* ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பது அவசியம்.

* நிறுவனங்களும், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களும் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

* ஆன்லைன் விளையாட்டுத் தொடர்பாக எழும் புகார்கள், குறைகள் தீர்க்கப்பட வேண்டும்

* இந்தியா அரசின் சட்டதிட்டங்களின் விதிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுகள் நடைபெறவேண்டும்.

* பணம் வைத்து ஆடும் விளையாட்டுகளுக்குத் தகுதியான வயது தொடர்பான சட்டங்களுக்கும் கட்டுப்பட வேண்டும்

மத்திய அரசின் விதிமுறைகள் எந்தளவுக்கு பின்பற்றப்படும் என்பது தெரியவில்லை. ஆன்லைன் விளையாட்டை முழுமையாக தடை செய்யவும் முடியாது. வேறு ஏதாவது வடிவில் வந்தே தீரும். ஆன்லைன் ரம்மிக்கு தீர்வுக்கு வருமா அல்லது டாஸ்மாக் போல் சகித்துக் கொள்ள வேண்டியதுதானா? விடை தெரியாத கேள்வி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com