இறந்தவரை மீண்டும் உயிரோடு மீட்டு அவருக்கு இரண்டாவது வாழ்க்கையை கொடுக்கும் விதமாக ஒரு நிறுவனம் முயற்சித்து வருகிறது. இது சாத்தியமா என்பது குறித்துப் பார்ப்போம்.
“வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால், பூமியில் நமக்கு இடம் ஏது?” என்ற வரிகள் ஒன்றும் சும்மா எழுதவில்லை. மனிதர்கள் தங்களுடைய அதிக அறிவால், அனைத்தையும் கட்டுபாட்டிற்குள் வைக்க முற்படுகிறார்கள். இயற்கையையும் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்பது இயற்கைதான். ஆனால், இறப்பை தடுத்து நிறுத்த நினைப்பதோ அல்லது மீண்டும் அவரையே உயிர்த்தெழ வைப்பதோ இயற்கைக்கு மாறான செயல் மட்டுமல்ல, மிகப்பெரிய விளைவையும் ஏற்படுத்தும். மீண்டும் ஒருவரை உயிர்த்தெழ செய்யவே முடியாது என்று நினைத்தாலும், மனிதர்கள் அதனை சாத்தியமாக்க போராடி வருகிறார்கள் என்பதே உண்மை.
ஆம்! ஒரு ஜெர்மன் கிரையோனிக்ஸ் (cryonics) ஸ்டார்ட்-அப் நிறுவனம், 1.73 கோடிக்கு இறந்தவரை மீண்டும் உயிர்த்தெழ வைக்கிறது.
இதனை கிரையோஜெனிக்ஸ் தொழில்நுட்பம் என்று அழைப்பார்கள். அதாவது ஒருவர் இறந்த இரண்டு நிமிடங்களுக்குள் ரத்தம் அனைத்தும் வெளியேற்றப்பட்டு அதற்கு பதிலாக ஒரு கெமிக்கலை உடம்பில் செலுத்துவார்கள். அதேபோல் செல்கள் சேதமடையாமல் இருக்க ஊசி மூலம் ஒரு மருந்து செலுத்தப்படும். இதன்பிறகு சடலம் மைனஸ் 130 டிகிரி குளிரில் வைக்கப்படும். இதன்பிறகு, நைட்ரஜன் அடைக்கப்பட்ட கன்டெய்னரில் சடலம் மைனஸ் 196 டிகிரி செல்சியசில் வைக்கப்படும்.
இந்த டெக்னாலஜி மூலம் இது இன்னும் 100 ஆண்டுகளுக்குள் சாத்தியமானது என்றாலும், சிலர் இது எப்போதுமே சாத்தியமில்லை என்கிறார்கள்.
ஆனால், டுமாரோ பயோ என்ற நிறுவனம் இந்த டெக்னாலஜியை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இறந்தவர்களை கடுமையான குளிரில் வைத்து அவர்களின் இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கப் போராடுகிறார்கள். இதுவரை அவர்கள் 'மூன்று அல்லது நான்கு' நபர்களையும் ஐந்து செல்லப்பிராணிகளையும் உறைய வைத்துள்ளனர். அதேபோல் இன்னும் 700 பேர் இதற்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இன்னும் யாரும் வெற்றிகரமாக உயிர்பெறவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒருவர் இறந்துவிட்டார் என்று சட்டப்பூர்வமாக தெரிந்தப்பின்னர், டுமாரோ பயோ ஆம்புலன்ஸிற்கு அவர் மாற்றப்படுகிறார். அப்படியே மற்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இப்படி டுமாரோ பயோ நிறுவனம் கடுமையாக முயற்சிப்பதற்கு ஒரே காரணம்தான். 1999ஆம் ஆண்டில் நார்வே நாட்டுக்கு, விடுமுறையைக் கழிக்கச் சென்ற ஒரு நபர், பனிச்சறுக்கு விளையாட்டின் போது, எதிர்பாராத ஒரு சம்பவத்தால் இரண்டு மணிநேரம் மருத்துவ ரீதியாக இறந்த நிலையில் இருந்தார், ஆனால் மீண்டும் அவர் புத்துயிர் பெற்றார்.
இது அவர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்த்திருக்கிறது.
டுமாரோ பயோ நிறுவனத்தின்மூலம் இறந்த ஒரு நபர் மட்டும் மீண்டும் பிழைத்துவிட்டால், அன்று இயற்கைக்கு மாறாக மனிதன் மற்றொரு தொழிலை தொடங்கிவிடுவான். அது மனித குலத்துக்கு மட்டுமல்ல பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்குமே சவாலாக மாறும்.