ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி தூத்துக்குடியில் போய் பேச முடியுமா? ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால்

ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி  தூத்துக்குடியில் போய் பேச முடியுமா?  ஆளுநருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால்

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஆளுநர் பேசிய பேச்சு, ஆளுங்கட்சி தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது. ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்து முதல்வர் நேற்று விரிவான கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஸ்டெர்லைட் போரட்டம் பற்றி ஆளுநரால் தூத்துக்குடியில் போய் பேச முடியுமா என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்திருக்கிறார்.

நேற்று மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து பேசியிருந்தார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு போராட்டம் நடந்தது. ஜனநாயக முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், வன்முறையில் முடிந்தது. அதனால் 15 அப்பாவி உயிர்கள் பலியாகின. அதுவொரு துரதிருஷ்டவசமான, சோகமான சம்பவம் என்பதை மறுக்க முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது மூடவேண்டும் என்று வெளிநாட்டு சக்திகள் விரும்பினார்கள். வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட நிதியினில் போராட்டம் தீவிரமாக நடத்தப்பட்டது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்படும் நிதிகளை கண்காணிக்க வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், போராட்டத்தை ஆளுநர் கொச்சைப்படுத்திவிட்டதாக விமர்சனம் எழுந்திருக்கிறது.

நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, ஆளுநரின் பேச்சை கண்டிப்பதாக தெரிவித்தார்.  ஆளுநர் மாளிகையில் இருந்தபடி பேசும் ஆளுநரால் தூத்துக்குடியில் போய் பேசமுடியுமா? சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசமுடியுமா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முன்னதாக,  ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து ஆளுநர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேம் என்று உதயநிதி ஸ்டாலின், டிவிட்டரிலும் பதிவு செய்திருந்தார். ஸ்டெர்லைட் போராட்ட உயிர்த்தியாகங்களை கொச்சைப்படுத்தியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதா நிராகரிக்கப்பட்டது என்றும் அரசியலமைப்புக்கு புறம்பாக ஆளுநர் பேசியதை வன்மையாக கண்டிக்கிறோம். மாநில நலனுக்கு எதிரான இந்த ஆணவப்போக்கை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் வை.கோ. வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் பேச்சு ஆணவத்தின் உச்சம் என்று தெரிவித்திருப்பதோடு  ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்களின் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் கொடும் சொற்களை ஆளுநர் வீசியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய ஆளுநர், தமிழ்நாட்டின் சாபக்கேடு.  இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆளுநர் பேச்சுக்கு தி.மு.கவின் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன. அ.தி.மு.க.வே, தமிழக பா.ஜ.கவினரோ இது குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com