ராஜபக்சே குடும்பத்தினர் கனடாவுக்குள் வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, அவரது ஆட்சியில் ராணுவ அதிகாரிகளாக இருந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி ஆகியோர் கனடாவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாக கனடா அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1983-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இலங்கையில் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போரில் திட்டமிட்டு, தமிழர்களுக்கு சேதம் விளைவித்து, மனித உரிமையை மீறிய பல கொடுமைகளை செய்ததால் தடை விதிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.
ராஜபக்சே குடும்பத்தினருக்கு கனடாவில் சொத்துகள் இருந்தால், அவை முடக்கப்படும். எவரும் கனடா எல்லைக்குள் நுழைய முடியாது. கனடாவில் வசிப்பவர்களுக்கும் வெளிநாட்டில் உள்ள கனடியர்களுடனும் நிதிப் பரிமாற்றம், வர்த்தகம் உள்ளிட்ட தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது.
இலங்கையில் கடந்த நாற்பது வருடங்களாக நடைபெற்று வந்த ஆயுதப் போர் காரணமாகப் பொருளாதாரம், அரசியல் ஸ்திரமற்ற நிலை உண்டாகியிருக்கிறது. பெரிய அளவில் மனித உரிமை மீறல் நடைபெற்றிருக்கிறது. சர்வதேசச் சட்டத்தை மீறுவோர் அதன் பின்விளைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்வதை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் கனடா இந்தத் தடையை அமல்படுத்தியிருக்கிறது என்று கனடாவில் உள்ள தமிழ் அமைப்புகள் விளக்கம் தருகின்றன.
கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் உட்பட உலங்கெங்கம் உள்ள தமிழர்கள் தடையை வரவேற்றிருக்கிறார்கள். கனடா அரசு விதித்திருக்கும் தடைகளுக்கு இலங்கை அரசு அதிருப்தி தெரிவித்திருக்கிறது. கொழும்பிலுள்ள இலங்கைக்கான கனடா தூதரிடம் அதிருப்தியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அங்கிருந்து தப்பிச் சென்றார்கள். பல நாடுகளுக்கு சென்றவர்கள், அங்கெல்லாம் அடைக்கலம் கிடைக்காமல் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள். இலங்கையில் இருந்தபடியே இன்னும் பல நாடுகளை தொடர்பு கொண்டு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
கனடாவின் தடை, எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் நாடுகள் ராஜபக்சே குடும்பத்தின் இலக்காக இருப்பதற்கு வாய்ப்பில்லை. அங்கெல்லாம் தங்களது உயிர்களுக்கு ஆபத்து வரும் என்று ராஜபக்சே குடும்பத்தினர் நினைப்பதால் இப்படியொரு முயற்சி நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, ராஜபக்சே குடும்பத்தால் கூடுதல் நெருக்கடி வரக்கூடும். உலகெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்களின் ஒத்துழைப்பு குறையக்கூடும். 14 ஆண்டுகளானாலும் சில காயங்கள் ஏனோ ஆறுவதில்லை.