தமிழகத்தில் உள்ள ஸ்டான்லி,திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்துச் செய்துள்ளது. இதனால், இக்கல்லூரிகளில் பயின்று வரும் இளநிலை மற்றும் முதுநிலை உள்ளிட்ட 786 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவு இல்லாதது, சிசிடிவி சேமராக்கள் பொருத்தப்படாதது மற்றும் கல்லூரிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் தேசிய மருத்துவ ஆணையம் மேற்குறிப்பிட்ட கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துச் செய்துள்ளது.
இதனால், தற்போது இக்கல்லூரிகளின் பயின்று வரும் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில், இளநிலை எம்பிபிஎஸ் படிப்பில் 250 மாணவர்களும், முதுகலை மருத்துவ படிப்பில் 204 மாணவர்களும் படித்துவருகிறார்கள். திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில், எம்பிபிஎஸ் இளநிலையில் 150 மாணவர்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 41 மாணவர்களும் படித்துவருகிறார்கள். அதேபோல், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரியில், எம்பிபிஎஸ் இளநிலையில் 100 மாணவர்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 41 மாணவர்களும் படித்துவருகிறார்கள். இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளதால், இக்கல்லூரிகளில் மொத்தம் 786 இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உளளது.
இந்தாண்டு மருத்துவ படிப்பை முடித்துவிட்டு டாக்டர் பட்டத்தை பெற காத்திருந்த 3 அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் தலையில் பேரிடியாக அங்கீகாரம் ரத்து எனும் செய்தி விழுந்துள்ளது.
இதுகுறித்து பேசிய அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் அ.இராமலிங்கம், “சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இள நிலை MBBS படிப்புக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்புக்கு SDPGA சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் MBBS சேர்க்கைக்கான NEET நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அப்படி இருக்கையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய மருத்துவ ஆணையம் தேர்வு நடத்துவதற்கு முன்பே MBBS கற்று தரும் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஒரு வருட காலத்தை வீணடித்து விட்டு மே 7 ம் தேதி நாடு முழுவதும் NEET தேர்வினை நடத்திய பின்னர் அங்கீகாரத்தை ரத்து செய்ய முயற்சிப்பது தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனர். அப்படி இருக்கையில் மூன்று கல்லூரிகளை அங்கீகார ரத்து என்பது ஏற்புடையதல்ல. மேற்படி கல்லூரி நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்து அனுப்பும் பொருட்டு உடனடியாக ரத்து செய்வதை கை விட வேண்டும். நாடு முழுவதும் ஒரே சீராக மருத்துவப் படிப்பை கொடுக்கும் நோக்கத்தில் தேசிய மருத்துவ ஆணையம் செயல்படுவது உண்மையானால் அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம், படிகள், உயர் பதவிகள், பணி சூழல் மற்றும் தேவையான வசதிகளை செய்து தர மாநில அரசுகளை வற்புறுத்த வேண்டும்.
மேலும், மருத்துவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கை விரல் வருகை பதிவேடு பராமரிக்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வரும் வேளையில் இதில் குறைபாடு இருக்கிறது என்று தற்போது ரத்து பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆணையம் சொல்வது போல தமிழக அரசு மருத்துவர்கள் ஆசிரியர் பணி செய்தால் இது பொருந்தும். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு நோயாளிகளுக்கு உலகத்தரத்தில் சிறப்பு மேல் சிகிச்சை, மேலாண்மை, ஆய்வுக்கூட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள், முகாம்கள், VIP convoy, காப்பீடு திட்டம், அதன் மூலம் வரவு செலவு போன்ற எண்ணற்ற காரியங்களை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பேராசிரியர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள். மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ பேராசிரியர்கள் வெறும் பேரிசிரியர் பணிகளை மட்டும் செய்வதில், ஒரு மருத்துவராகவும், மருத்துவமனை நிர்வாக அதிகாரி போன்ற அனைத்து பணிகளையும் செய்துவருகிறார். இதனால் மருத்துவ பேராசிரியர்களின் பணிநேரத்தை காலவரை செய்ய முடியாது. அல்லது மருத்துவ பேராசிரியர்களுக்கு குறிப்பிட்ட பணி நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான கால வரையறை செய்ய வேண்டும். வேலையில் கூடுதல் நேரம் கடந்தால் அதற்காக பணம் அல்லது விடுமுறை வழங்கி ஈடு கட்ட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் உள்ள 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனை சரிசெய்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் 3 அரசு மருத்துவமனை கல்லூரி முதல்வர்கள் டெல்லி சென்றுள்ளனர். இதனால், விரைவில் 3 அரசு மருத்துவமனை கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆணைய நீக்க அனைத்து முயற்சிகளும் தமிழ்நாடு அரசு எடுக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். NEET போன்ற கடுமையான மருத்துவ நுழைவுத் தேர்வெழுதி மாணவர்கள் படித்துவரும் சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கை கேள்வி குறியாக்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கை உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்” என்றார்.