தகுதி நீக்கம் ரத்து: மக்களவை செயலகம் அறிவிப்பு!

தகுதி நீக்கம் ரத்து: மக்களவை செயலகம் அறிவிப்பு!

ட்சத் தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல். 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர் சயீத் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சி செய்ததாகக் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முகமது பைசல் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் முகமது பைசல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கவரட்டி செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி உடனடியாக முகமது பைசலின் எம்பி பதவி தகுதி நீக்க அடிப்படையில் பறிக்கப்பட்டது. ஆனால், அவர் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்தார். அந்த விசாரணையில் அவருக்கு வழங்கப்பட்ட பத்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு அந்த நீதிமன்றம் தடை விதித்தது. அதுமட்டுமின்றி, எம்பி பதவியில் இருந்து தன்னை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்ற உத்தரவையும் பெற்றார்.

அதைத் தொடர்ந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை கிடைத்ததால் தனது மக்களவை உறுப்பினர் பதவியின் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று முகமது பைசல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், லட்சத் தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் முகமது பைசல் எம்பி பதவி அவருக்கு மீண்டும் கிடைத்துள்ளது. அவருக்கான சலுகைகளும் தொடரும்.

இந்தத் தகுதி நீக்க ரத்து வாய்ப்பு ராகுல் காந்திக்கும் கிடைக்கலாம். சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு தடை பெறலாம். அப்படிச் செய்தால் தகுதி நீக்க உத்தரவு திரும்ப பெறப்பட்டு மீண்டும் எம்பி பதவியில் ராகுல் காந்தியால் தொடர முடியும். ஆனால், இதுவரை ராகுல் காந்தி தரப்பிலோ, காங்கிரஸ் கட்சி தரப்பிலோ மேல்முறையீட்டிற்கு செல்லவில்லை. சூரத் நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய முப்பது நாட்கள் கால அவகாசம் வழங்கி ராகுல் காந்திக்கு ஜாமீன் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com