
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு திமுகவின் சார்பில் அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியது, கலைஞருக்கும் காமராஜருக்கும் இடையே இருந்த உறவு மிகவும் முக்கியமானது. கலைஞர் முதல்வராக இருந்த போது காமராஜரிடம் பல்வேறு ஆலோசனைகளைப் பெற்று தமிழ்நாட்டை வழி நடத்தினார். திமுக, காங்கிரஸ் கட்சிகள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பணி பெரிது, பல நேரங்களில் வளர்ச்சிக்காக இரண்டு கட்சிகளும் இணைந்து பணியாற்றி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் பெயர்களை சொல்லாமல் ஓட்டு கேட்க செல்ல முடியாது. காமராஜர் பெயரை சொன்னால் தான் ஓட்டு கேட்க முடியும் இப்படி தமிழ்நாட்டிற்காகவே வாழ்ந்திருக்கிறார்.
காமராஜரின் பெயர் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் சென்றிருக்கிறது அதற்கு காரணம் அரசியலில் இருப்பவர்களில் குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத ஒரு சிலரில் காமராஜர் முதன்மையானவர். பத்தாண்டு காலம் முதல்வராக இருந்தாலும் எந்த வித குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாமல் நேர்மையானவராக வாழ்ந்தவர் காமராஜர் என்று கூறினார். அப்போது திருச்சி மாநகராட்சி மேயர் மு.ன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், நாடார் பேரவை நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.