லுங்கி கட்டிக்கொண்டு வந்தால் தியேட்டரில் சினிமா பார்க்க முடியாதா? இது என்ன அநியாயம்!

லுங்கி கட்டிக்கொண்டு வந்தால் தியேட்டரில் சினிமா பார்க்க முடியாதா? இது என்ன அநியாயம்!

தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த பால அய்யனார் என்பவர் தன் குடும்பத்தினர் 11 பேருடன் அங்குள்ள வெற்றி திரையரங்கில் டாடா என்ற திரைப்படத்தைப் பார்க்கச் சென்றார். அங்கு பால அய்யனாரின் தந்தை தன் குடும்பத்தினர் 11 பேருக்குமாக 1200 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்திருக்கிறார். டிக்கெட் எடுக்கும் போது அவர் அணிந்திருந்தது லுங்கி தான். அப்போது மட்டுமல்ல கடந்த 45 வருடங்களாகவே அவர் லுங்கி அணிவது தான் வழக்கம் என்று சொல்கிறார் பால அய்யனார்.

திரையரங்கில் டிக்கெட் எடுத்ததும் என்ன செய்வோம்?

அடுத்தபடியாக படம் பார்க்க உள்ளே தானே செல்ல வேண்டும்! அப்படித்தான் பால அய்யனார் குடும்பமும் செய்ய முயன்றது. ஆனால், அவர்கள் திரையரங்கின் உள்ளே நுழையும் இடத்தில் அங்கு இருந்த ஊழியரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கையில் உள்ளே நுழைவதற்கான லீகல் ரைட் தரக்கூடிய டிக்கெட் வைத்திருக்கிறார்கள். பணம் செலுத்திப் பெற்றது. இத்தனைக்கும் பிளாக்கில் வாங்கிய டிக்கெட் கூட கிடையாது. முறைப்படி திரையரங்கின் டிக்கெட் கவுண்ட்டரில் பணம் செலுத்திப் பெற்ற டிக்கெட்டுகள் அவை. பிறகென்ன இப்படி உள்ளே நுழைய முடியாமல் தடுக்கிறார்களே இவர்கள்? என்று பால அய்யனார் குடும்பத்தினருக்கு ஒரே ஆற்றாமையாகக் போயிற்று. அவர்கள் அங்கிருந்த ஊழியரிடம் எதற்காக இப்படிச் செய்கிறீர்கள் என்று வினவ. அதற்கு அவர்கள் சொன்ன பதிலில் பால அய்யனார் குடும்பத்தார் வெகுண்டு எழாதது தான் பாக்கி.

அந்த திரையரங்கில் லுங்கி அணிந்தவர்களுக்கு அனுமதி கிடையாதாம். அதை ஒரு ரூல் ஆகவே அவர்கள் பின்பற்றி வருகிறார்கள். அதற்காக திரையரங்கின் முன் பகுதியில் அறிவிப்பு பலகை கூட வைத்திருக்கிறார்களாம். கவனிக்காமல் வந்தது பால அய்யனார் குடும்பத்தினரின் தவறு தான் என்பது போல அவர்கள் பதில் அளித்திருக்கிறார்கள். இதை பால அய்யனார் குடும்பம் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த பதில் அவர்களின் கோபத்தையே தூண்டி விட்டிருக்கிறது.

என் தந்தை டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் எடுக்கும் போதும், பணம் வெலுத்தும் போதும் லுங்கி தானே அணிந்திருந்தார், அப்போதே சொல்லி இருக்க வேண்டியது தானே.. அனுமதி இல்லையென்று, இப்போது உள்ளே வந்த பிறகு இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்? தமிழ் நாட்டில் லுங்கி கட்டிய தமிழனுக்கு மரியாதை இல்லையா? லுங்கிக்கு இங்கு அனுமதி இல்லை என்றால், லுங்கி கட்டுபவர்கள் எல்லாம் கெட்டவர்கள், மோசமானவர்கள் என்று சித்தரிக்கப் பார்க்கிறார்களா? இந்த திரையரங்கத்தினர்?! என் அப்பா 45 வருடங்களாகவே லுங்கி தான் கட்டுவது வழக்கம், அவரை இங்கே படம் பார்க்க வருவதற்காக வேஷ்டி கட்டுங்கள், பேண்ட் போடுங்கள் என்று உடையை மாற்றி அணிந்து கொண்டு வரச் சொல்ல முடியுமா? இதெல்லாம் நியாயமே இல்லை. என்று கோபத்துடன் தனது குமுறலை வெளிப்படுத்துகிறார் பால அய்யனார்.

இவர்களது கோபத்தைக் கண்டு முதலில் டிக்கெட்டுக்குச் செலுத்திய பணத்தை ரீஃபண்ட் செய்வதாகச் சொன்ன தியேட்டர் நிர்வாகம், அடுத்தபடியாக லுங்கி கட்டியவருக்கு மட்டுமே ரீஃபண்ட் செய்ய முடியும் என்றும் மீதமுள்ளவர்கள் தங்களிடம் இருக்கும் டிக்கெட்டில் படம் பார்க்கச் செல்லலாம் என்றும் அவர்களுக்கான தொகையை ரீஃபண்ட் செய்ய முடியாது என்றும் கறார் காட்டியிருக்கிறது.

இது பால அய்யனார் குடும்பத்தினரை மேலும் கொந்தளிக்கச் செய்து விட்டது.

குடும்பத்துடன் சந்தோசமாக ஒரு திரைப்படம் பார்க்கலாம் என்று வந்தால், இதென்ன எங்களது நிம்மதியைக் கெடுப்பதே போல இவர்கள் இத்தனை ரூல்ஸ் பேசுகிறார்கள். சரி லுங்கிக்குத் தான் மரியாதை இல்லை, கட்டிய பணத்தையாவது திரும்பப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பலாம் என்றால், அதையும் தர மாட்டோம் என்று கறாராகச் சொல்கிறார்களே, இதென்ன இவர்கள் வைத்தது தான் சட்டமா? லுங்கி கட்டியவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்கப் பார்க்கிறார்களா? இந்த தியேட்டர் காரர்கள்? என்று காட்டமாகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டுகள் மொத்தத்தையும் தியேட்டரிலேயே வைத்து சுக்கல் சுக்கலாகக் கிழித்து எரிந்து விட்டுச் சென்று விட்டார்கள்.

முடிவில் முத்தாய்ப்பாக ‘நாசமாக போகட்டும் இந்த தியேட்டர்!’ என்று சாபம் வேறு!

சாமானியர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்களாக கருதப்படக் கூடியவை திரைப்படங்கள். அப்படி தங்களது தினப்படி சிரமங்களைச் சற்றேனும் மறந்து கொஞ்சம் ரிலாக்ஸாக குடும்பத்துடன் ஜாலியாக இருக்கலாம் என்று படம் பார்க்க வந்தவர்களின் மனதில் மேலும் சுமையேற்றி அனுப்பி இருக்கிறது வெற்றி தியேட்டர் நிர்வாகம்.

இதை சாதாரண விஷயமாகக் கடந்து போய் விடலாம் தான்.

ஆனால், யோசித்துப் பாருங்கள். அரைகுறை ஆடையில் திரையில் கதாநாயகிகள் ஆடலாம், ஆனால், வருடமெல்லாம் உழைத்துக் களைத்துக் கிடக்கும் ஒரு சாமானிய மனிதன் முழு ஆடையான லுங்கி அணிந்து திரையரங்குக்குள் நுழையக் கூடாதா?! இதென்ன அநீதி?! என்ற குரல் காதில் விழத்தான் செய்கிறது.

இதற்கென்ன பதில் சொல்லப் போகிறார்கள் அவர்கள்?!

தனக்கு நடந்த அநீதியை பால அய்யனார் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு நீதி கேட்டிருக்கிறார். பொதுமக்கள் அதற்கு பலவாறாக தங்களது கருத்துக்களைத் பதிவு செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com