சிஏபிஎஃப் காவலர் தேர்வுகள் 13 மாநில மொழிகளில் நடைபெறும் மத்திய அரசு அறிவிப்பு!

சிஏபிஎஃப் காவலர் தேர்வுகள் 13 மாநில மொழிகளில் நடைபெறும் மத்திய  அரசு அறிவிப்பு!
Published on

மத்திய ஆயுதக் காவல் படை சிஏபிஎஃப் காவலர் தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மத்திய ஆயுதக் காவல் படை சிஏபிஎஃப் காவலர்களுக்கான தேர்வு இந்தி, ஆங்கிலம் தவிர இனி 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய உள் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல் படுத்தப்படும்.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய ஆயுதப் படையில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கும், மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்காகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த முடிவை எடுத்துள்ளார்.

மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்துவதற்கு வசதியாக மத்திய உள்துறை அமைச்சகமும் பணியாளர்கள் தேர்வு வாரியமும் இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளது. இந்தப் புதிய வாய்ப்பினை பயன்படுத்தி உள்ளூர் இளைஞர்கள் மத்திய பணிகளில் சேர்வதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இனி மத்திய ஆயுதப் படை காவலர் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் இந்தி, ஆங்கிலம் தவிர அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளிலும் அமைக்கப்படும். இந்த முடிவின் மூலமாக லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களின் தாய்மொழியில் தேர்வெழுதுவதுடன் தங்களுக்கான தேர்வு வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com