‘இனி சிஏபிஎப் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்’ உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

‘இனி சிஏபிஎப் தேர்வுகளை தமிழிலும் எழுதலாம்’ உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

ந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டுவரும் மத்திய ஆயுதப்படைப் பிரிவில் மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவையும் உள்ளன. மத்திய ரிசர்வ் காவல் படையின் 9,223 காவலர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டின் சார்பில் 579 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 27ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 25ம் தேதி வரை கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிஆர்பிஎப் பணிக்கான தேர்வு தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், ‘‘சிஆர்பிஎப் பணிக்கான தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தேர்வு எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது. இந்தத் தேர்வு இந்தி பேசுவோருக்கே சாதகமாக உள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சிஆர்பிஎப் பணியில் சேர சம வாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இந்தத் தேர்வை நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற்றம் செய்ய சிஆர்பிஎப் அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், ‘அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் சிஏபிஎப் தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும்’ என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் 15 மொழிகளில் சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று, சிஆர்பிஎப் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்பு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே தேர்வுகள் நடைபெற்ற நிலையில், இனி மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் லட்சக்கணக்கணக்கான இளைஞர்கள் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com