கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் தப்புதான் - கோர்ட்டு சொன்ன தீர்ப்பு

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் தப்புதான் - கோர்ட்டு சொன்ன தீர்ப்பு

வனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் வாகன ஓட்டுகளின் பொறுப்பில்லாத தன்மையைத்தான் காட்டுகிறது என ஒரு விபத்து வழக்கில், சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. எனவே கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தினாலும், அது விபத்திற்கான முக்கியக் காரணமாக எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

2012 ஜூலை 22ஆம் தேதி, டில்லியில் அரசுப்பேருந்து ஒன்று எந்த சிக்னலும் இல்லாமல் நடுரோட்டில் நிறுத்தப் பட்டிருந்தது. இதை கவனிக்காமல் வந்த இருசக்கர ஓட்டுநர் ஒருவர், நின்று கொண்டிருந்த பஸ் பின்னால் மோதி விபத்துக்குள்ளானார். அதில் அவர் உயிர் பறிபோனது. இந்த விபத்து குறித்து நடந்த வழக்கில், இறந்தவரின் குடும்பத்திற்கு 17 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. விபத்திற்கு, இருசக்கர வாகன ஓட்டியின் கவனக்குறைவும் காரணமாக இருப்பதால், அவருக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டில் 20% கழித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தனர். 

இதை எதிர்த்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விசாரணையில் எவ்வித சிக்னல்களும் இன்றி பஸ் நடுரோட்டில் நின்றதே விபத்திற்கு முக்கிய காரணம் என, நேரில் பார்த்த சாட்சிகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டியும் சற்று கவனமாக வந்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்பதால், இறந்தவரின் கவனக் குறைவும் விபத்திற்கு ஒரு வகையில் காரணமாக அமைகிறது என்று நீதிபதிகள் கூறினார்கள். அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது மட்டுமே அலட்சியமான டிரைவிங் என்று சொல்லிவிட முடியாது. கவனக்குறைவாக ஓட்டுவதும் அலட்சியமான டிரைவிங்தான். எனவே, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் அறிவித்த 20 சதவீத குறைப்பை எவ்விதத்திலும் மாற்ற முடியாது. 

விபத்தில் உயிரிழந்தவர் ஒரு அரசு காண்ட்ராக்டர். அவருடைய வயது 54.  இவரை நம்பி மனைவி, தாய், இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் என ஏழு பேர் இருக்கின்றனர். எனவே பாதிக்கப்பட்டவரின் வருமானத்தின் அடிப்படையில் நஷ்ட ஈட்டை 17 லட்சத்திலிருந்து 42 லட்சமாக உயர்த்த வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் 20% குறைக்கப்பட்டால் மொத்தம் 33,73,379 ரூபாய் அவருக்கு நஷ்ட ஈடாக வழங்கப்படும். இதற்கான ஆண்டு வட்டியாக 7.5% சேர்த்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து பணம் செலுத்தும் நாள் வரை வட்டியையும் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

நம்மில் பலரும் சாலையில் வாகனத்தை வேகமாக ஓட்டுவதுதான் ஆபத்தானது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். மெதுவாக வாகனம் ஓட்டினால் எந்த பிரச்சனையும் வராது என்ற நினைப்பில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் முற்றிலும் தவறானது. சாலையில் பயணிக்கும்போது வேகத்தை விட கவனமாக ஓட்டுவது தான் மிக முக்கியம். இல்லையென்றால் இதுபோன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த வழக்கே சாட்சி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com