இந்திய ராணுவ வீரர் பிரபு கொலைக்கு கண்டனம் தெரிவித்து மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 3500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் குடிதண்ணீர்த் தொட்டி அருகே துணி துவைப்பதில் ஏற்பட்ட தகராறில் திமுகவைச் சேர்ந்தவர்களால் ராணுவ வீரர் பிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக கவுன்சிலர் சின்னச்சாமி உள்ளிட்ட 9 பேர் கைது ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பாக நேற்று சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவை சேர்ந்த நிர்வாகிகள், ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் தமிழக அரசுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகு சேப்பாக்கத்தில் இருந்து சென்னை போர் நினைவு சின்னம் வரை மெழுகு வர்த்தி ஏந்தி பாஜக சார்பாக பேரணி சென்றனர். இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்நிலையில் சென்னையில் அனுமதியின்றி மெழுகுவர்த்தி பேரணி நடத்தியதாகக் கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரு.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சட்ட விரோதமாக கூடுதல், உள்ளிட்ட 3 பிரிவுகளின் படி 3500 பாஐகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.