இந்திய மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு!

இந்திய மல்யுத்த சங்க தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது வழக்குப்பதிவு!
Published on

இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளனத் தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜி பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்த புகார்களை அடுத்து இரண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக்கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த மே 28 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற வளாகத் திறப்புவிழாவின் போது அந்த இடத்துக்கு பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஒலிம்பிக் போட்டிகளில் நாட்டுக்காக வென்ற பதக்கங்களை ஹரித்வாரில், கங்கை நதியில் வீசப் போவதாக சாக்ஷி மாலிக், வினேஷ் போகட மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் அறிவித்தனர்.

இந்த நிலையில் பதக்கங்களுடன் ஹரித்வார் சென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தடுத்து நிறுத்தி பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம். விரைவில் பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என்றனர். இதையேற்று வீரர்கள் அங்கிருந்தி திரும்பிச் சென்றனர்.

இந்த விவகாரம் உலக அளவில் கவனம் பெற்றதை அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக மல்யுத்த சம்மேளனம் ஆகியவை மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்தது.

இந்த சூழலில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளகவும் பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.

பிரிஜ்பூஷன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரில், அவர், வீராங்கனைகளிடம் மிக மோசமாக நடந்துகொண்டுள்ளதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் மைனர் பெண் ஒருவரும் அடங்குவார். பிரிஜ் பூஷன் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளிடம் அவர்கள் சரியாக மூச்சு விடுகிறார்களா என்று பார்ப்பதுபோல் மார்புகளைத் தொடுவது மற்றும் கை, கால் மற்றும் இடைப்பகுதிகளை தொடுதல் உள்ளிட்ட செய்கைகளில் பிரிஜ் பூஷன் ஈடுபட்டுள்ள வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் மல்யுத்த வீராங்கனைகள் காயமடைந்தால் அவர்களிடம் இணக்கமாக நடந்து கொண்டால் மல்யுத்த சம்மேளனம் சார்பில் செலவு செய்வதாகவும் அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், தம்மீதான இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் மறுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com