அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாடகையில்லா வீடு வழங்குவதைக் கட்டாயமாக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுதாரர் எம்.புருஷோத்தமன், ஆசிரியர் குடியிருப்புகள் கட்ட பொது நிலம் ஒதுக்கவும், ஆசிரியர்களுக்கு வீடுகள் வாங்க மானியம் வழங்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமது மனுவில் கோரியுள்ளார். மேலும் ஆசிரியர்களுக்கு வட்டியில்லா வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமது மனு குறுத்து புருஷோத்தமன் கூறுகையில், தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. நிர்வாகங்கள் தங்கள் கல்வி சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றனவே தவிர, அவர்கள் தங்களது பள்ளிகளில் அயராது பணிபுரியும் ஆசிரியர்களின் நலனில் அக்கறை காட்டவில்லை.
"அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்த ஆசிரியர்களுக்கு கல்வியை அர்த்தமுள்ளதாக வழங்குவதற்கு மன அமைதி மிகவும் முக்கியம். அப்படி மன அமைதியுடன் அவர்கள் வசிப்பதற்கு இடம் தரும் வகையில் மலிவு விலையில் வீடுகள் மிகவும் அவசியம்," என்று அவர் கூறினார்.
இந்த மனு நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்சில் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.