கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊடங்கு அமலில் இருந்த காலத்தில், கொரோனா விதிகளை மீறி, மின்சாரக் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணங்களைக் கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலின்போது வாக்கு எண்ணும்போது அதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறியும், மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலின் கைதைக் கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறி இன்றைய தமிழகப் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அரியலூரில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த ஒன்பது அவதூறு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி, அமைச்சர் சிவசங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘உள்நோக்கத்துடன் தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்குகள் தம் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதாக’ அமைச்சர் சிவசங்கர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், அமைச்சர் சிவசங்கருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்த ஒன்பது வழக்குகளும் ரத்து செய்து தீர்ப்பளித்து உத்தரவிட்டு இருக்கிறார்.