மனிதர்களைக் கண்டு பறவைகள் அஞ்சி ஓடுவதைத்தான் பார்த்திருப்போம். ஆனால், உலகத்தில் ஒரு பறவையைக் கண்டு மனிதர்கள் அஞ்சி ஓடுவதைப் பார்த்திருப்போமா? ஆமாம், அப்படியும் ஒரு பறவை இனம் உண்டுதான். அதுதான் கசோவரி இனப் பறவை. இது மனிதனுக்கு மரண பயத்தையே ஏற்படுத்தும் அளவுக்கு ஓட ஓட விரட்டி, ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொல்லக்கூடிய அளவுக்கு மிகவும் பலம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. ஆனாலும், இந்தப் பறவை இனங்களை முற்காலத்தில் மனிதர்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே வைத்து வளர்த்து வந்துள்ளனர் என்பதை அறியும்போது, ஆச்சரியமாகவும் அதேசமயம் கொஞ்சம் பயமாகவும்தான் உள்ளது.
இந்த கசோவரி இனப் பறவைகள் பறக்கும் தன்மை அற்றவையாகும். ஆனால், இவை மின்னல் வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை. இந்த வகை பறவைகள் நியூகினியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் வெப்ப மண்டல காடுகளில் அதிகமாக வாழ்கின்றன. இந்தப் பறவைகள், ‘இவர்களால் தமக்கு ஆபத்து’ என்று அறிந்தவுடன் அவர்களை ஓட ஓட விரட்டி, தமது கூரிய அலகுகளால் அவர்களின் தோலைக் கிழித்துக் கொல்லும் சக்கி வாய்ந்தவை. அது மட்டுமல்ல, இந்தப் பறவைகள் தமது பலம் வாய்ந்த கால்களால் ஒருவரை ஒரு உதை விட்டால் அவரின் எலும்புகளே நொறுங்கி விடுமாம். அந்தளவுக்கு பலம் வாய்ந்தவை. மேலும், தமது கூரிய அலகுகளால் இவை கொத்தினால் ஒரு கூர்வாளால் வெட்டிய அளவுக்குக் காயம் உண்டாகுமாம்.
இந்த கசோவரி இனப் பறவைகளில் பெரும்பாலும் ஆண் பறவைகள்தான் அடைகாத்து குஞ்சு பொறிக்குமாம். பெண் பறவைகள் முட்டையை இட்டுவிட்டு, அதை ஆண் பறவைகள் வசம் ஒப்படைத்துவிட்டுச் சென்று விடுமாம். பிறகு ஆண் பறவைகள் ஒன்பது மாதங்கள் வரை அந்த முட்டையை அடைகாத்து குஞ்சு பொறித்து, அவை பறக்கும் வரை வளர்க்குமாம். இந்தக் குஞ்சுகளை ஆண் பறவைகள் மட்டுமே வளர்ப்பதால், அந்தக் குஞ்சுகள் தாய்ப்பாசம் என்பதே என்னவென்று அறியாமல் வளர்கின்றன. இதனால்தான் அவை மிகவும் ஆக்ரோஷமாகவும் கோபத்துடனும் செயல்படுவதாக பறவையியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அமைதியாகவும் காணப்படும் இந்தப் பறவைகளின் அருகில் சென்றால், உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதுதான் நிதர்சனம். கடந்த 2019ம் ஆண்டு புளோரிடாவில் வசித்து வந்த 75 வயது முதியவரை இந்த வகை பறவை ஒன்று தாக்கியதில், அவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.