
தமிழக சுகாதாரச் செயலாளர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன் தீப் சிங் பேடி தன்னை சாதிய ரீதியாக துன்புறுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர் மனிஷ் நரனவாரே ஐஏஎஸ் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக விழுப்புரம் எம்பியான ரவிக்குமார் தன்னுடைய ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,“ ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் @DrManishIAS தற்போதைய சுகாதாரத் துறை செயலாளர் திரு @GSBediIAS பற்றி கூறியிருக்கும் புகார் அதிர்ச்சி அளிக்கிறது. திரு பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் நான் MLA ஆக இருந்தேன்.அவர் பாகுபாடு காட்டி நான் பார்த்ததில்லை. அவர்மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை.உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு கற்றச்சாட்டு.பொது வெளியில் ஒரு IAS அதிகாரி முன்வைத்துள்ள இந்தப் புகாரை மாண்புமிகு @CMOTamilnadu அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” விசிக எம்பி ரவிக்குமாரின் ட்விட்டர் பதிவை அடுத்து இந்த விவகாரம் ஊடகங்களுக்கு தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர் மனிஷ் நரனவாரே ஐஏஎஸ் அவர்களிடம் கல்கி ஆன்லைன் சார்பாக தொடர்புக்கொண்டு பேசினோம், அப்போது தன்னுடைய புகார் மனு குறித்து பேசிய டாக்டர் மனிஷ் நரனவாரே ஐஏஎஸ், சென்னை மாநகராட்சியில் துணை சுகாதார ஆணையராக கடந்த 14.06.2021 முதல் 13.06.2022 வரை நான் அந்த பதவியில் இருந்தபோது அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி என்னை சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தினார். நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டு என்னை அடக்குமுறைக்கு ஆளாக்கிறார். கோப்புகளில் கையெழுத்திடுவதை தாமதப்படுத்த இரவு வெகு நேரம் காத்திருக்க செய்வார். ஒருவழியாக பல மணிநேரம் காத்திருந்து ககன் தீப் சிங் பேடியை பார்க்கச் சென்றால், இப்போ லேட் ஆயிடுச்சு நாளை பாத்துக்கலாம் என்பார். இதுபோல் தினமும் நடந்தது.
அதேபோல், என்னிடம் நீ புத்த மதத்தை பின்பற்றிக்கொண்டு ஏன் உஜ்ஜயன் கோயிலுக்கு செல்கிறார் என கேட்டு காயப்படுத்தினார். மேலும், எனக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே விரிசல் ஏற்படச் செய்தார். திடக்கழிவு மேலாண்மை சீனியர் பொறியாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளுடன் எனக்கு மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கினார். தற்போது நான் கூறியிருப்பது சில சம்பவங்களைத்தான். ககன் தீப் சிங் பேடியின் அடக்குமுறை தாங்காமல் நான் மன அழுத்தத்திற்குச் சென்றேன். என் நிலைமை குறித்து அவரிடம் நான் மனம்விட்டு பேசியபோதும், அவர் என் மீதான அடக்குமுறை அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்துக்கொள்ள நினைத்தேன். ஆனால், என் தந்தை ஊரில் இருந்து வந்து எனக்கு பக்கபலமாக இருந்தார். ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துக்கொண்டு ககன் தீப் சிங் பேடி செய்த என் மீதான அடக்குமுறைகள் அனைத்துமே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. என்னுடைய இந்த இக்கட்டான காலகட்டத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஐஏஎஸ் போன்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.
தற்போது தமிழக சுகாதாரத் துறை செயலாளராக உள்ள ககன் தீப் சிங் பேடி மீது புகார் தெரிவித்து இரண்டு பக்க அறிக்ககை தயாரி செய்துள்ளேன். இந்த புகாரை மாநில தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக அனுப்பு உள்ளேன்” என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சாதிய ரீதியலான அடக்குமுறைக்கு உள்ளாகி, அதனை தலைமை செயலாளருக்கு புகார் மனுவாக அனுப்பும் அளவுக்கான, ஈரோடு கூடுதல் ஆட்சியர் டாக்டர் மனிஷ் நரனவாரே ஐஏஎஸ் அதிகாரியின் செயல்பாடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என நம்புவதாக டாக்டர் மனிஷ் நரனவாரே ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.