“அரசியலில் இருந்து ஜாதியை நீக்க வேண்டும்” – கமல்ஹாசன்

“அரசியலில் இருந்து ஜாதியை நீக்க வேண்டும்” – கமல்ஹாசன்
Published on

சென்னை எழும்பூர் மிடில்டன் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நீலம் புத்தக மையம் திறப்பு விழா நேற்று (12.02.2023) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "உறவே, உயிரே, தமிழே வணக்கம். இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம்.  இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை, தேவை. அரசியல் என்பது தனியாகவும் கலாச்சாரம் என்பது தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம்.

மேலும் “என்னுடைய அரசியல் எதிரி சாதி தான் என்றும் அரசியலில் இருந்து சாதியை நீக்க வேண்டும்” என்று கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது.

அலங்காரத்துக்காக சொல்லும் வார்த்தை அல்ல. இதுதான் நான் உயிர்வாழ்வதற்கான காரணம். இந்த உறவு இருந்தால்தான் நான் நிமிர்ந்து நிற்க முடியும். என் மொழி இருந்தால்தான் நான் இவர்களுடன் அளவளாவ முடியும்.

இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை. இவர் (பா. ரஞ்சித்) நிறைய சினிமா எடுத்திருக்கிறார். நான் அந்த விழாவிற்காக எல்லாம் வரவில்லை. அதையெல்லாம்விட ஒரு முக்கியமான விஷயம், நானும் இவரும் இல்லாதபோதும் இருக்கப்போகும் ஒரு தாக்கம், நான் எப்படி 36 வருடங்களுக்கு முன்னாடி, 26 இதழ்களே மட்டும் நடத்தி முடித்த மய்யத்தை பற்றிய பேச்சு இன்றும் இருக்கிறதோ, அதே போன்று, இங்கே நம் சரித்திரத்தைச் சொல்லும்போது, முயன்றார்கள், பலர் முயன்றார்கள், அதில் நீலம் என்கிற ஒரு பண்பாட்டு மையம் இயங்கிக் கொண்டிருந்தது என்று சொல்வார்கள். நீங்கள் எத்தனை காலம் இயங்கிக்கொண்டிருந்தீர்களோ உங்களுக்கு அத்தனை நூற்றாண்டு ஆயுள்.

இங்கே உள்ளே பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னேன், அரசியல் என்பது தனியாகவும் கலாச்சாரம் என்பது தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நாம் உருவாக்கியதுதான் அரசியல், மக்களுக்கானதுதான் அரசியல்.

அதை திருப்பிப்போட்டு தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்னும் வார்த்தையே இனி வரக்கூடாது என்று நான் நினைக்கிறேன். நாம் நியமித்தவர்கள் அவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வரும் பட்சத்தில், ஜனநாயகம் நீடூழி வாழும். அப்படியில்லாமல், தலைவனை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் இங்கே கீழே குடிமகன்களாக அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் தன் அளவில் தலைவன்தான், என்பதை உணரும் பட்சத்தில் விரைவில் உலகில் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்.

என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்று பார்க்கும்போது, அது சாதிதான். நான் அதை இன்றைக்கு சொல்லவில்லை. 21 வயது பையனாக இருந்தபோதே நான் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போது அதை நல்ல வார்த்தைகளில் இன்னும் பலமான வார்த்தைகளில் சொல்லும் அளவுக்கு பக்குவம் எனக்கு வந்திருக்கிறது.

நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் கொடூரமான ஆயுதம் இந்த சாதிதான். அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்று எனக்கு 3 தலைமுறை தள்ளி இருந்த அம்பேத்கர் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்றும் நடந்தபாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் ஒரு நீட்சியாகத்தான் நான் நீலம் பண்பாட்டும் மையத்தைப் பார்க்கிறேன். எழுத்துகள் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரைக்கும் மய்யமும் நீலமும் ஒன்றுதான்.

முயற்சி எல்லாம் ஒன்றுதான். நான் மய்யம் பத்திரிகை ஆரம்பித்தபோது அதற்கான காரணமும் அதுதான். இன்றைக்கு அதில் எழுதியிருக்கும் தலையங்கங்களைப் பார்த்து நானே வியக்கிறேன். அரசியல்வாதி ஆன பிறகு, சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

25-27 வயது இளைஞனுக்கு அந்த சமரசங்கள் எதுவுமில்லை. அவர் எடுத்து வைத்த கருத்துக்கள் இன்று எனக்கு வியப்பாக இருக்கிறது. அதுபோல, ரஞ்சித் அவர்களுக்கு தான் ஆரம்பித்து வைத்த இந்தப் போராட்டம், அவருக்கு இன்னும் தாடியெல்லாம் வெள்ளையான பிறகு, அவருடைய முயற்சிக்கு ரசிகராக மாற வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகள்.” என்று கூறினார்.

அடுத்ததாக இயக்குனர் பா. ரஞ்சித் பேசுகையில், "புத்தகங்கள் தான் என்னை சினிமா நோக்கி நகர்த்தி சென்றது. புத்தகங்கள் படிக்கும்போது உலக ஆளுமைகள் மீது ஆர்வம் இயல்பாக வந்துவிடும். அப்படி ஒரு ஆளுமையாக தான் கமல்ஹாசனை பார்க்கிறேன். கமல்ஹாசனின் திரைப்படங்களை பிரித்தாலே சினிமாவின் வளர்ச்சியை எளிதாக புரிந்துகொள்ள முடியும். கமலின் எழுத்துப் பாணியை பார்த்து நான் வியக்கிறேன். வியாபார நோக்கத்தில் மட்டுமில்லாமல் ஒரு கலைஞனாக கலாச்சார இடைவெளியை சரியாக பயன்படுத்தியவர் கமல்ஹாசன்" என பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com