கால்நடைக் கழிவுகளை அகற்ற டெண்டர்: அகமதாபாத் மாநகராட்சியின் புதிய முயற்சி!

கால்நடைக் கழிவுகளை அகற்ற டெண்டர்: அகமதாபாத் மாநகராட்சியின் புதிய முயற்சி!

கால்நடைகள் வளர்ப்பு அதிகமிருக்கும் பகுதிகளில் பொது இடங்களில் மாட்டு சாணம் போன்ற கழிவுகளை அகற்றுவது பல்வேறு மாநில அரசு நிர்வாகத்துக்கும் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில், இதுபோன்ற பிரச்னைக்குத் தீர்வு காணும்விதமாக குஜராத் மாநில, அகமதாபாத் மாநகராட்சி புதிய யோசனை ஒன்றை முன்னெடுத்து இருக்கிறது.

முன்னதாக, தெருக்களில் பொதுமக்களுக்கு இடையூறாகத் திரியும் கால்நடைகள் குறித்த பிரச்னைக்குத் தீர்வு காண குஜராத் உயர் நீதிமன்றம் தொடர்ந்து மாநில அரசுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்து வந்தது. அதைத் தொடர்ந்து, அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு ஒரு தீர்வு காணும் முயற்சியாக சாலைகளில் உள்ள மாட்டுச் சாணங்களை தினமும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்ய தனி பணியாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தத் திட்டத்துக்காக ஒரு டெண்டர் விடப்பட்டது. அதன்படி, வருடத்துக்கு 30 லட்சம் ரூபாய் செலவில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதையடுத்து, ஒப்பந்ததாரர்கள் அகமதாபாத் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளில் உள்ள தெருக்களில் சேர்ந்திருக்கும் கால்நடைக் கழிவுகளை சுத்தம் செய்து அப்புறப்படுத்த வேண்டும். இதற்கான தொழிலாளர்கள், டிராக்டர் உள்ளிட்ட உபகரணங்களை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் ஏற்பாடு செய்து ஆட்களைப் பணியமர்த்த வேண்டும்.

இந்தத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்பதை பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். இந்த வேலை செய்யும் தொழிலாளர்கள் தாங்கள் அப்புறப்படுத்தி சேகரிக்கும் மாட்டு சாணத்தில் பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் இல்லாமல் சாணத்தை மட்டுமே எடுக்க வேண்டும். ஏனைய கழிவுகள் கலந்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அப்புறப்படுத்தப்படும் கால்நடைக் கழிவுகளை எடை போட்டு, அந்த ஆவணத்தை ஒப்பந்ததாரர் மாநகராட்சி நிர்வாகத்திடம் குறிப்பிட்ட காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படும் பட்சத்தில் மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com