கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜீன் மாதத்தில் காவிரி நீரின் நீர் வரத்து குறைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. நடப்பாண்டு ஜீன் மாதம் வந்து சேரவேண்டிய 10 டி.எம்.சி தண்ணீருக்கு பதிலாக 3 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் டெல்டா கடைமடை பகுதிகளில் நடைபெறும் குறுவை சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். ஜீன் மாதம் முடிவதற்குள் 10 டி.எம்.சி தண்ணீர் கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்படும் என்பது நடைமுறை. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் 7 முறைக்கும் குறைவாகவே குறித்த காலத்திற்குள் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கிறது.
கடந்த மாதத்தில் தமிழகத்திற்கு 2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்துள்ளது. ஏறக்குறைய 6 டி.எம்.சி தண்ணீர் இன்னும் வரவேண்டியிருக்கிறது. எப்போதெல்லாம் கர்நாடாகவில் அதிகமாக மழை பெய்கிறதோ அப்போது மட்டும் குறித்த அளவு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மழை பெய்ய ஆரம்பிக்காவிட்டால் தமிழகமும் காத்திருக்க வேண்டியதுதான்.
கடந்த ஆண்டு 2022ல் 16 டி.எம்.சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்பட்டது அப்போவது காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பின. இதனால் வெள்ளத்தை தவிர்ப்பதற்காக அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இல்லாவிட்டால் 5 டி.எம்.சி தண்ணீர் கூட கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
2013க்கு பின்னர் 2022ல் தான் அதிகபட்சமாக 16 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது. காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டதற்கு பின்னர் அதிகளவு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிகழ்வுதான் இது ஒன்றுதான்.
2018 பிப்ரவரி மாதம் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மாதந்தோறும் தண்ணீர் திறந்துவிடுவதில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால், காவிரி நிதி நீர் ஆணையம் அமைப்பதற்கு முன்னும், பின்னும் அதாவது 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில்தான் மிகக்குறைவான தண்ணீர், காவிரி மூலம் கிடைத்தது.
தற்போதைய நிலையில் மேட்டூர் அணை, 86 அடி நிரம்பியிருக்கிறது. இன்னும் 13 அடி உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிகிறது. தற்போதைய நிலையில் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டால் கையிருப்பில் உள்ள தண்ணீர் அனைத்தும 30 நாட்களுக்கு மட்டுமே வரும்.
ஆகவே, தென்மேற்கு பருவ மழை ஆரம்பித்து கர்நாடகாவில் மழை பெய்தால் மட்டுமே காவிரியில் நீர் வரத்து அதிகரிக்கும். இல்லாவிட்டால் குடிநீருக்கே தமிழ்நாடு சிரமப்பட வேண்டியிருக்கும் என்கிறார்கள். இப்படிப்பட்ட மோசமான சூழலில்தான் மேகதாது அணை பற்றிய சர்ச்சைகளும் சூடுபிடித்திருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.