மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படும் சிபிஎஸ்இ நிர்வாகத்தின்கீழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. அதேபோல், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சி.பி.எஸ்.இ. வாரியத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி வெளியிடப்பட்டது.
அந்தவகையில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 17-ந்தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது.
இதில் 10-ம் வகுப்புக்கு பிப்ரவரி 17-ந்தேதி தொடங்கி மார்ச் 6-ந்தேதி வரையும், 12-ம் வகுப்புக்கு பிப்ரவரி 17-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தற்காலிக அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2-ம் கட்ட பொதுத்தேர்வு மே 15-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை நடைபெறும் எனவும் சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது.
மேலும் விடைத்தாள்களை திருத்தும் பணிக்கான தேதியும் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி ஒவ்வொரு பாட தேர்வும் முடிந்த 10-வது நாளில் இந்த பணி தொடங்கி 12 நாட்களுக்குள் முடிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய சிபிஎஸ்இ கல்வி வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவசர மருத்துவ நிலை, தேசிய அளவிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்கள் மட்டும் 25% விடுப்பை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றும் எந்த காரண காரியமின்றி வருகை தராத மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தகுதி பெற மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து விவரங்களையும் CBSE அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.