மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுத்துள்ளது.
சமீப காலங்களில் இணையதளத்தில் எவ்வித கோட்பாடுகளும் கட்டுப்பாடுகளும் இல்லாமல் சோசியல் மீடியாவில் கணக்கு வைத்திருப்பவர் எல்லாம் தாறுமாறாக விளம்பரங்கள் செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள். அதற்கென எந்த விதமான விதிமுறைகளும் இல்லாமல் அல்லது கடைபிடிக்காமல் இருந்து வந்தனர். அதில் பல பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தற்போது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு கோட்பாடுகளை வகுத்துள்ளது.
ஏற்கெனவே சென்ற ஆண்டு ஜூன் மாதம், மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை கட்டுப்படுத்த வழிகாட்டு விதிமுறைகளை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டது. அதில் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியானது.
சமூக ஊடகங்களில் பிரபலங்களாக இருப்பவர்கள், பிரபலங்கள் செய்யும் விளம்பரங்கள் மீது இந்திய நுகர்வோர் விவகாரத் துறை (Department of Consumer Affairs) பல கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற பிரபலங்கள் (Celebrities) உள்பட சமூக ஊடக பிரபலங்களுக்கு (Social Media Influencers) மத்திய அரசு சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. விதிமுறைகளை மீறும் சமூக ஊடக பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
சமூக ஊடக பிரபலங்கள் மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைக் செய்யக்கூடாது. பிரபலங்கள் ஒப்பந்தமாகும் அல்லது வெளியிடும் விளம்பரங்கள் குறித்த போதுமான அறிவையும், அந்த பொருள் அல்லது முதலீடு குறித்த தெளிவான விளக்கத்தையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
போதுமான ஆராய்ச்சிகள் இல்லாமல், மக்களை ஏமாற்றும் முதலீடுகளைப் பற்றி ஊகத்தின் அடிப்படிடையில் விளம்பரங்களைச் செய்யக்கூடாது. விளம்பரம் செய்யும் பிராண்ட் குறித்த போதுமான அறிவும், அதில் மீடியா பிரபலங்கள் முதலீடு செய்துள்ளார்களா என்பது குறித்தும் வெளியிட வேண்டும்
முதலீடுகள் குறித்து வெளியிடும் விளம்பரங்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை மக்கள் நன்றாக பார்க்கும்படி எழுத்துக்களும், எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் அவை இருக்க வேண்டும்.
மேலும் வீடியோ அல்லது பதிவுகளில் விளம்பரம் செய்யும் போது "advertisement" "ad" "sponsored" "collaboration" அல்லது "partnership" போன்ற வார்த்தைகள் கட்டாயம் இருக்க வேண்டும். இது HashTag வடிவிலோ அல்லது தலைப்புகளிலோ இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இதில் விதிக்கப்பட்டு உள்ளது.