

கடந்த ஜனவரி 9-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருந்த விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம், சென்சார் விவகாரம் தொடர்பாக இன்று வரை ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இதனையடுத்து விரைந்து சென்சார் வழங்க வேண்டும் என படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், படத்தை வெளியிட முடியாத சூழலில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி இன்று காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் வழக்காக ஜனநாயகன் சென்சார் வழக்கு வர உள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து செல்லும் ஜனநாயகன் சென்சார் வழக்கை வாபஸ் பெற்றால் தான் படத்தை வெளியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து, கேவின் தயாரிப்பு நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, திரைப்படத்தை மறுதணிக்கை குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற சென்சார் போர்டு முடிவை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டது.
ஜனநாயகன் படத் தயாரிப்பாளர், வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற பதிவகத்திற்கு ஒரு அதிகாரப்பூர்வ கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வழக்குறைஞரான விஜயன் சுப்ரமணியன், தனது கட்சிக்காரர் இனி இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விருப்பமில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இனிமேல் எந்தத் தயாரிப்பாளரும் அவசர சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கமாட்டார்கள் என்பது, இந்த வழக்கின் மூலம் தெளிவாகிறது.
தணிக்கை வாரிய அறிவுறுத்தலின் படி, ஜனநாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பியுள்ளது தயாரிப்பு நிறுவனம். ஆகையால் ரிவைசிங் கமிட்டி (RC) பரிந்துரைக்கும் இடங்களில் கட் செய்யப்பட்டு, விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக தற்காலிகமாக சட்ட நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைவரின் கவனமும் ரிவைசிங் கமிட்டியின் மேல் திரும்பி உள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டுக்கு ஏற்பட்டிருந்த இடையூறுகளை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட வெளியீட்டை இனியும் தள்ளிப் போட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் முழுமனதாக இம்முடிவை எடுத்துள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், அடுத்த 10 நாட்களுக்குள் சென்சார் சான்றிதழ் கிடைத்து விடும் என எதிர்பார்ககப்படுகிறது. இதனையடுத்து பட ரிலீஸ் தொடர்பான வேலைகளில் படத் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட உள்ளது.
ஜனநாயகன் திரைப்படம் இம்மாத இறுதிக்குள் வெளியாக அதிக வாய்ப்புள்ளதால், தியேட்டர் ஒதுக்கீடு மற்றும் டிக்கெட் புக்கிங் வேலைகளில் தயாரிப்பு கவனம் செலுத்த உள்ளது.
ஒருவேளை தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் இருந்திருந்தால், ஜனநாயகம் திரைப்படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டு எப்போதோ ரிலீஸ் ஆகி இருக்கும் எனக் கூறப்படுகிறது.