இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மற்றும் 18 வயதுக்கு மேலான காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை குறித்தும், அதிக வழக்கு நிலுவையில் உள்ள மாநிலங்கள் குறித்தும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுள்ள குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறித்தும், மேலும் கடந்த 10 ஆண்டுகளில் அதிக பெண்கள் காணாமல் போவது அதிகரித்து இருப்பது குறித்தும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வழங்கியுள்ள எழுத்துப்பூர்வமான பதில். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. இவ்வாறு தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின் படி காணாமல் போன 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்று இரண்டாக பிரிக்கப்பட்ட எண்ணிக்கை, அவர்களில் மீட்கப்பட்டவர்கள், மீட்க படாதவர்கள் என்று பிரித்து 2016 ஆம் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடைசியாக 2021 ஆம் ஆண்டு மற்றொரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 2021 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 18 வயதுக்கு கீழ் உள்ள காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 133 மற்றும் 18 வயதுக்கு மேல் உள்ள பெண்களில் 1 லட்சத்து 72 ஆயிரத்தி 760 என்றும், மொத்தமாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 893 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அறிக்கை ஆகும்.
குறிப்பாக 2021 ஆம் ஆண்டு கணக்குப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள மாநிலங்களில் மேற்குவங்க வங்கம் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் 5609 பேரும், பீகார் மாநிலத்தில் 5362 பேரும், டெல்லியில் 3959 பேரும், மத்திய பிரதேசத்தில் 2830 பேரும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும் 18 வயதுக்கு மேல் உள்ள பெண்களில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள மாநிலங்களில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் 30,444நபர்களும், மேற்கு வங்கத்தில் 29,501 நபர்களும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 19,445 நபர்களும், டெல்லியில் 15, 372 நபர்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு அறிக்கையின்படி 18 வயதுக்கு கீழ் உள்ள கண்டுபிடிக்கப்படாத சிறுமிகளின் எண்ணிக்கை 2016 வரை 3351, 2021 வரை 1117, 18 வயதுக்கு மேல் உள்ள பெண்களின் எண்ணிக்கை 2016 வரை 3351, 2021 வரை 6047 பெண்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவிலான பெண்கள் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் பதிலில், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசியலுக்கே உள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு போன்றவை அரசியல் அமைப்பு சட்டம் 7வது அட்டவணையின் படி மாநில அரசின் வசம் இருக்கிறது. சில மாநில அரசுகள் பெண்களுக்கு எதிரான, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை வேடிக்கை பார்க்கின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுக்க ஒன்றிய அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது. சர்வதேச அங்கீகாரத்துடன் 112 அவசர அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கான 10 9 8 அவசர தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது. மேலும் ரயில்வே சைல்ட் லைன் போன்ற அமைப்பும் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.