மத்திய அரசின் 'ஆதர்ஷ்' திட்டம்!

1,218 ரெயில் நிலையங்களில் பணிகள் முடிந்துள்ளன!
மத்திய அரசின் 'ஆதர்ஷ்'  திட்டம்!

ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பதற்காக மத்திய அரசின் 'ஆதர்ஷ்' என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் மொத்தம் 1,253 ரெயில் நிலையங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு இருந்தன. இதில் இதுவரை 1,218 ரெயில் நிலையங்களில் பணிகள் முடிந்துள்ளன.

இன்னும் 35 ரெயில் நிலையங்களில் மட்டுமே பணிகள் முடிக்கப்பட வேண்டும். அவை 2023-2024-ம் நிதியாண்டுக்குள் முடிக்கப்பட்டுவிடும் என ரெயில்வே தெரிவித்து உள்ளது.

ரயில் நிலையங்களை நவீனப்படுத்தி மேம்படுத்துவது ஒரு தொடர் நடைமுறையாகும். தற்போது ஆதர்ஷ் ரயில் நிலைய திட்டத்தின் அடிப்படையில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல், ரயில் நிலைய கட்டடங்களின் முகப்புகளை மாற்றியமைத்தல், குளிக்கும் வசதியுடன் ஓய்வு அறைகளை மேம்படுத்துதல், பெண்களுக்கு என தனி ஓய்வு அறைகளை அமைத்தல், கணினி வசதி, கட்டணக் கழிப்பறைகள், குளிர்நீர் வசதிகள், ரயில் நிலையங்களில் நுழைவு வாயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக சாய்தள வசதிகள் செய்தல் போன்றவை இதில் அடங்கும்.

மேலும், ரயில் நிலையங்களை மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவற்றுடன் நவீனப்படுத்துவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமையல் அறைகளை மேம்படுத்துதல், ஆன்லைன் மூலம், பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான ஆர்டரையும் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயணிகளுக்கு தரமான, சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், நாள் ஒன்றுக்கு சுமார் 9.30 லட்சம் லிட்டர் ரயில் நீர் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ரயில் நிலையங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இந்த திட்டத்துக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட ரெயில் நிலையங்களில் தமிழ்நாட்டில் சென்னை கோட்டத்தில் உள்ள சென்னை கடற்கரை, சென்னை சேத்துப்பட்டு, சென்னை பூங்கா, தாம்பரம், குரோம்பேட்டை, பரங்கிமலை, பெரம்பூர், கொருக்குப்பேட்டை, ராயபுரம், திருவள்ளூர், ஆவடி, திருநின்றவூர், திருவாலங்காடு, அரக்கோணம், காஞ்சீபுரம், மணவூர், செஞ்சி பனம்பாக்கம், காட்பாடி, மதுரை கோட்டத்தில் அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, கூடல்நகர், பாம்பன், புதுக்கோட்டை, புனலூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், தேனி, தென்காசி சந்திப்பு, தூத்துக்குடி, விருதுநகர் சந்திப்பு, கடையநல்லூர், குந்தாரா, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சேலம் கோட்டத்தில் கோவை சந்திப்பு, பீளமேடு, சேலம், திருப்பூர், இருகூர், திருச்சி கோட்டத்தில் திருச்சி, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், அரியலூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகூர், புதுச்சேரி, திருவாரூர், விருத்தாசலம், வேலூர் கண்டோன்மென்டு ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com