

டிஜிட்டல் உலகம் உருவெடுக்க உருவெடுக்க சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. நாட்டில் உள்ள மக்களில் 99% பேர் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள். சேமிக்கும் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டு நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் இந்த சைபர் குற்றவாளிகள் ஈஸியாக ஒரு மெசேஜ் மூலம் ஹேக் செய்துவிட்டு மொத்த பணத்தையும் வாரி சுருட்டி எடுத்து சென்றுவிடுவார்கள். சமீபத்தில் இந்த சைபர் குற்றவாளிகள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களைக் குறிவைத்து குறிப்பாக SBI-ன் YONO கணக்கு முடக்கப்படும், கணக்கிலுள்ள பணமெல்லாம் பறிபோகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி, பணமோசடியில் ஈடுபடுகின்றனர்.
ஒருவேளை நீங்கள் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர் என்றால் வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் வழியாக நடக்கும் இந்த அபாயகரமான மோசடி வேலைகள் எப்படி நடக்கின்றன? இதிலிருந்து உங்கள் வங்கிக் கணக்கை நீங்கள் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்று தெரிந்து கொள்ளுங்கள்..!
அதாவது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் செயலி மூலம் எஸ்பிஐ யோனோ (SBI YONO) கணக்குகளைப் பயன்படுத்துபவர்கள் உடனடியாகத் தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் எனவும், தவறினால் கணக்கு முடக்கப்படும் என்று மெசேஜ் வருகிறது. பயனர்கள் அச்சத்தின் காரணமாக அந்த செய்தியை நம்பி, அதில் உள்ள இணைப்புகளை (லிங்க்) கிளிக் செய்துவிட்டால், அதைவைத்து மோசடியாளர்கள் பணத்தை எளிமையாகப் பறித்துவிடுவார்கள்.
இப்போது PIB வெளியிட்ட தகலின்படி, எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வரும் இத்தகைய மெசேஜ்கள் முற்றிலும் போலியானது. மேலும் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களையும் அவர்களின் பணத்தையும் திருடுவதற்கான ஒரு சதித்திட்டம்தான் இது என்று எஸ்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் PIB வெளியிட்ட அறிக்கையில், சில சைபர் மோசடியாளர்கள் அனுப்பும் மெசேஜை கிளிக் செய்தால் SBI KYC AADHAR UPDATE எனும் பெயரில் ஒரு APK ஃபைல்-ஐ பதிவிறக்கம் செய்யுமாறு கேட்கும். ஆனால் கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே காணப்படும் இதுபோன்ற APK ஃபைல் மிகவும் ஆபத்தானவை. அவற்றைப் பதிவிறக்கம் செய்தால் உங்கள் போனின் முழுமையான கட்டுப்பாடு சைபர் குற்றவாளிகளின் கைகளுக்குச் சென்றுவிடும்.
மேலும் இதன் மூலம் உங்களது தனிப்பட்ட புகைப்படங்கள், செய்திகள், பிற மெசேஜ்கள் மற்றும் வங்கி ஓடிபி-களை அவர்களால் எளிதாக அணுக முடியும். எனவே உங்கள் அனுமதியின்றி உங்கள் கணக்கில் உள்ள அனைத்து பணமும் காணாமல் போகும். எனவே இதுபோன்ற மெசேஜ் மூலம் வரும் APK ஃபைல்-ஐ தொடவே கூடாது.
அதேபோல் தற்போது PIB உண்மை சரிபார்ப்புத் துறை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது. அதன்படி APK ஃபைல்களை பதிவிறக்கம் செய்யுமாறு எஸ்பிஐ போன்ற பொதுத்துறை வங்கிகள் ஒருபோதும் தங்களது வாடிக்கையாளர்களைக் கேட்பதில்லை.
அதுவும் ஆதார் புதுப்பிப்பு போன்ற பணிகள் இருந்தாலும், வங்கிகள் எப்போது பயனர்களை அதிகாரப்பூர்வ செயலியையே பயன்படுத்துமாறு சொல்லும். இல்லையென்றால் நேரடியாக வங்கி கிளைக்கும் செல்லுமாறு கேட்டுக்கொள்ளும். மற்றபடி இதுபோன்ற லிங்குகளை அனுப்பி பதிவிறக்கங்களைச் செய்ய சொல்லாது. எந்தவொரு இணையதள முகவரியை கிளிக் செய்யவும் சொல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.