தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடலில் 81 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்துக்கு பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. கலைஞர் கருணாநிதியின் நுற்றாண்டை முன்னிட்டு இந்தப் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட்டு இருக்கும் இது, கருணாநிதியின் நினைவிடத்துக்குப் பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டு கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பார்வையிடும்படி அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
கலைஞர் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி கோரி, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது. அதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுசூழல் துறை சில நிபந்தனைகளுடன் ஏற்கெனவே அனுமதி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைத் தொடர்ந்து, மத்திய அரசின் கடலோர ஒழுங்கு முறை ஆணையத்திடமும் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று தமிழக அரசின் விண்ணப்பத்தை ஏற்று, மெரினா கடலில் கலைஞர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. ஏற்கெனவே, சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு விதித்த பதினைந்து நிபந்தனைகளை கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் விதித்து இருக்கிறது. அதன்படி, நினைவுச் சின்னம் அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களை கடலில் வீசக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, ஆமைகள் முட்டையிடும் பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.