கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை அனைத்திலும் இந்தியை திணித்து வரும் மத்திய அரசு, இப்போது வானொலிகள் மூலமாகவும் இந்தியை திணிப்பது நியாயமற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
"காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
காரைக்கால் வானொலியில் தினமும் காலை 5.52 முதல் இரவு 11.20 மணி வரை 17.28 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் எந்த முன்னறிவிப்புமின்றி, நேற்று (அக்டோபர் 2) முதல் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. காலையில் 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும், இரவில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் மும்பை விவிதபாரதி நிலையத்தின் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக வானொலி நிலைய அதிகாரிகள் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மொழி, கலாச்சாரம், தொழில் முறை ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே மாதிரியான வானொலி நிகழ்ச்சிகளை கொண்டு வருவதே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தத்துவத்திற்கு எதிரான செயல் என தனது அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.