NIA
NIA

காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்பு: 6 மாநிலங்களில் 50 இடங்களில் சோதனை!

Published on

ஞ்சாப், ஹரியாணா, தில்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இந்த சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரன்ஸ் விண்ணோய், பாம்பிகா மற்றும் அர்ஷ்தீப் தல்லா போன்ற குண்டர்கள் குழுக்களுக்கு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பஞ்சாபில் 30 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்களில், ஹரியாணாவில் 4, உத்தராகண்டில் ஓரிடம் மற்றும் தில்லி, உத்தரப் பிரதேசத்தில் ஒரு சில இடங்கள் என மொத்தம் 50 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் போன்ற பிரிவினைவாத ஆதரவுக் குழுக்கள் சில இந்தியாவில் சிலரை அடையாளம் கண்டு ஹவாலா மூலமாக பணப் பரிவர்த்தனை செய்து போதைப் பொருட்கள், ஆயுதங்கள் வாங்க இங்குள்ள சிலரை ஊக்குவிப்பதாக என்.ஐ.ஏ.க்கு  தகவல் கிடைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இன்றைய சோதனை நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ம் ஆண்டிலேயே இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டது.

இதற்குப் பதிலடி தரும் விதமாக தில்லியில் உள்ள கனடா தூதரை நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டது. மேலும், கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய விசா வழங்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் இந்திய அரசு அறிவித்தது. இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான இந்த மோதல் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இருநாட்டு உறவு விரிசல் அடைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com