'ஆன்லைன்' மூலமாக சான்றிதழ்கள்! பத்திர பதிவு துறை அதிரடி!.

பத்திர பதிவு அலுவலகம்
பத்திர பதிவு அலுவலகம்

இனி திருமணம் மற்றும் வில்லங்க சான்றிதழ் கோரும் விண்ணப்பதாரர்களை நேரில் அழைக்கக் கூடாது என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட விண்ணப்பம் பதிவான நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும்.

வீணாக தாமதம் ஏற்பட்டதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரப்பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. வில்லங்க சான்று பெற, ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால் போதும் என்ற முறை, 2019ல் அறிமுகமானது.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ஆவண எழுத்தர் அலுவலகங்கள் வாயிலாக, ஒரு விண்ணப்பத்துக்கும் , லஞ்சம் வசூல் நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுகின்றன.

இதை தடுக்க, பதிவுத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தற்போது திருமண சான்று, வில்லங்க சான்று ஆகியவற்றுக்கான மனுக்களை, ஆன்லைன் முறையில் மட்டுமே பெற வேண்டும் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்திர பதிவு துறை
பத்திர பதிவு துறை

இதுகுறித்து, பதிவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு:

திருமண சான்று, வில்லங்க சான்று தேவைப்படுவோர், பதிவுத்துறையின் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அளிக்க வேண்டிய ஆவணங்கள், சான்று, விபரங்கள் குறித்த பட்டியலை வெளியிட வேண்டும்.

விண்ணப்பம், இணைப்பு ஆவணங்கள், கட்டணங்கள் ஆகியவற்றை இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள், ஆன்லைன் வாயிலாகவே கேட்டு பெற வேண்டும். பரிசீலனை முடிந்த நிலையில் சான்றுகளை, மக்கள் ஆன்லைன் முறையிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com