மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய சந்திரபாபு நாயுடு திட்டம்?

மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய சந்திரபாபு நாயுடு திட்டம்?

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.சந்திரபாபு நாயுடு மீண்டும் தேசிய ஜனநாயக முன்னணியில் சேர திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையிலும் தெலுங்குதேசம் கட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை சந்திரபாபு துண்டித்துக் கொண்டார்.

சமீபகாலமாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு மோடியையும் அவரது தலைமையிலான ஆட்சியையும் புகழ்ந்து பேசி வருகிறார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறி வருகிறார். இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி மீண்டும் இணையக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஏப். 26 ஆம் தேதி தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தின்போது, “பிரதமர் நரேந்திர மோடி ஒரு புதிய கண்ணோட்டத்தில் செயல்பட்டு வருகிறார். உலக அளவில் இந்தியாவின் பெருமையை பிரதமர் மோடி நிலைநாட்டி வருகிறார். இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கி வருகிறார்” என்று கூறியுள்ளார். மேலும் தேசத்தை கட்டமைப்பதில் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட தாம் விரும்புவதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எனக்கு பிடித்திருக்கிறது. அவர் நாட்டின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறார். நான் தெலுங்கு பேசும் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன்.

“ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரும் விவகாரத்தினால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலக வேண்டியிருந்தது. அந்த நாளில் அது ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்த்து. ஆனால், என்றுமே நான் மோடியின் கொள்களுக்கு எதிரானவன் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்குதேசம் கட்சி மீண்டும் இணையும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று கேட்டதற்கு, காலம்தான் இதை முடிவு செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சி கருதி பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகளை நான் ஆதரிக்கிறேன் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஆந்திரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 173 தொகுதிகளில் 23 இடங்களிலும் மட்டும் அக்கட்சி வெற்றிபெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைய சந்திரபாபு நாயுடு விரும்பினாலும், மாநில பா.ஜ.க. தலைவர் சோமு வீர்ராஜு, மீண்டும் தெலுங்குதேசம் கட்சியுடன் கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவருகிறார்.

நடிகராக இருந்து அரசியல்வாதியான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியுடன் கூட்டணி வைத்து தெலுங்குதேசம் கட்சியை பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.

எனினும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து எப்படியாவது 2024 தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று பவன் கல்யாண் திட்டமிடுகிறார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதுதான் எனது முக்கிய பணி என்றும் அவர் கூறிவருகிறார்.

எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியை இணைப்பது குறித்து கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளரும் கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளருமான சுநீல் தேவ்கர் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிட விரும்பாத பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், தெலங்கானாவில் நாங்கள் ஜெயிக்க வேண்டுமானால் எங்களுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு தேவை. ஏனெனில் அங்கு அவர்களுக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. தெலுங்கு தேசம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால் அதனால் எங்களுக்கு லாபம்தான் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com