ஜூலை 14ம் தேதி விண்ணில் பாயக் காத்திருக்கும் சந்திராயன்-3: இஸ்ரோ தகவல்!

ஜூலை 14ம் தேதி விண்ணில் பாயக் காத்திருக்கும் சந்திராயன்-3: இஸ்ரோ தகவல்!

ந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த 2008ம் ஆண்டு முதன் முதலில் சந்திராயன்1 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்தது. இந்த ஆராய்ச்சியில் சந்திரனில் நீர் இருப்பதைக் கண்டறிந்து உலகையே வியப்புக்கு உள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து, சந்திரனில் தரையிறங்கி அதை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்2 விண்கலம் அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு நிலவுக்கு அனுப்பப்பட்டது.

இந்த சந்திராயன்2 விண்கலம் கடந்த 2019ம் ஆண்டு மார்க்3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அது 2019ம் ஆண்டு நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்து, ஒருசில தொழில்நுட்ப கோளாறுகளினால் தரையிறங்கும்போது அது நிலவில் மோதி செயலற்றுப் போனது. இந்த நிலையில் தற்போது நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன்3 திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மார்க்3 ராக்கெட் மூலம் சந்திராயன்3 விண்கலத்தை ஏவுவதற்கான பணிகளை தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்து இருக்கிறார்கள். ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட், தற்போது எல்.வி.எம்.3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோஜெனிக் என மூன்று நிலைகளில் எரிபொருள் உதவியால் இந்த ராக்கெட் விண்ணில் பாயும்.

சந்திராயன்3 விண்கலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இம்மாதம் 14ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது. பூமியிலிருந்து சுமார் 3.86 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலவுக்கு, சந்திரயான்3 விண்கலத்தை செலுத்தும் பணிகள் தற்பொழுது படுவேகமாக நடைபெற்று வருகின்றன. உலகின் பல நாடுகளும் தற்பொழுது விண்வெளியில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், விண்வெளியை ஆராய்ச்சி செய்யும் நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா முக்கியமான நாடாகப் பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com