நிலவில் உள்ள லேண்டர் மற்றும் ரோவரை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தில் இருக்கும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்கியது. இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் ஆய்வு செய்து அரிய தகவல்களை அனுப்பின. அதன்மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நிலஅதிர்வின் தன்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கண்டறியப்பட்டன.
இந்தப் பணிகள் அனைத்தும், நிலவின் பகல் நேரமாக இருந்த 14 நாட்களில் மேற்கொள்ளப்பட்டன. ரோவரின் பணி வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது. பின்னர் நிலவில் இரவு தொடங்கியதால், லேண்டரும், ரோவரும் தற்காலிகமாக உறக்க நிலைக்கு சென்றன.
இதன்பின்னர் நிலவில் பகல் பொழுது வந்ததும் லேண்டர், ரோவரை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.இந்நிலையில் நிலவின் தென்துருவப் பகுதியில் சூரிய உதயம் தொடங்கி உள்ள நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் லேண்டரையும், ரோவரையும் தட்டி எழுப்ப தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த சிக்னலும் வரவில்லை என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.