கோடை வெய்யில் பல்வேறு மாநிலங்களிலும் கொளுத்தத் தொடங்கி உள்ளது. இதனால் ஒவ்வொரு வீடுகளிலும் மின் விசிறி மற்றும் குளிர் சாதனங்களின் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் மின்சாரக் கட்டணமும் மிகவும் அதிகரித்து வருகிறது. இது வீடுகளுக்கு மட்டுமின்றி அலுவலகங்களுக்கும் பொருந்தும். மின் பற்றாக்குறையை தவிர்க்க உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வெளிச் சந்தையில் கொள்முதல் செய்தல் என அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் மின் நுகர்வை குறைக்கும்முகமாக பஞ்சாப் மாநில அரசு அலுவலகங்களின் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், அரசு அலுவலகங்களை காலை 7.30 மணிக்கே தொடங்க உத்தரவிட்டு இருக்கிறார். அதோடு, மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் நண்பகல் நேரத்தில் அலுவலகப் பணிகளை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பஞ்சாப் மாநில அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 7.30 மணிக்குத் தொடங்கி 2 மணிக்கு முடிக்கப்படவிருக்கிறது. இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் இன்று காலை 7.30 மணிக்கே தனது அலுவலகத்துக்கு வந்து அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு பணிகளைத் தொடங்கினார். இது பரிசோதனை முயற்சிதான் என்றும், இந்த முயற்சி இன்று தொடங்கி ஜூலை மாதம் 15ம் தேதி வரை தொடரும் என்றும், அவசியம் ஏற்பட்டால் இந்த நடைமுறை மேலும் நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதன் முதலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் எதிர்பார்த்தபடி மின் நுகர்வை கணிசமாகக் குறைக்கும்பட்சத்தில் மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டம் பின்பற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.