போக்குவரத்தை சீர் செய்யச் சொன்னவரை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ் அதிகாரி மாற்றம்!

போக்குவரத்தை சீர் செய்யச் சொன்னவரை பூட்ஸ் காலால் உதைத்த போலீஸ் அதிகாரி மாற்றம்!
Published on

மிழ்நாடு - புதுச்சேரி எல்லைப் பகுதியான வாஞ்சூரில், நாகை மாவட்டத்துக்கு உட்பட்ட சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. நாகூர், வாஞ்சூர்  ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்துவதாக  போலீசாருக்கு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அதனைத் தடுப்பதற்காக திருமுருகன் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கும்பகோணத்திலிருந்து நாகை நோக்கி வந்த இரண்டு அரசு பேருந்துகள் நீண்ட நேரமாகியும் ஒரே இடத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனையறிந்த உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சிலர் சாலை தடுப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சம்பவ இடத்துக்கு வந்த நாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் சாலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கடுமையாகக் தாக்கினார். அதோடு அவரை ஒருமையில் பேசியதோடு, பொதுநலனுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த நபரை இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றினார். அதைத் தொடர்ந்து காவல் வாகனத்துக்குள் சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தனது பூட்ஸ் காலால் அந்த  நபரின் முகத்தில் எட்டி உதைத்து இருக்கிறார்.

பொது நலனை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை, பொறுப்பில்லாத வகையில் காவல் அதிகாரி ஒருவர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்த அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக வைரலானது. இந்த நிலையில் அந்த காவல் உதவி ஆய்வாளர் பழனிவேல் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com