#BIG NEWS : "மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தில் பேரதிர்ச்சி: ரசிகர்கள் ரகளை - பாதியிலேயே வெளியேறினார் ஜாம்பவான்!"

messi india visit
MESSI india visitSource:hindustan times
Published on

உலக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி , ஏற்கனவே திட்டமிட்டப்படி  GOAT INDIA TOUR இன் முதல் படியாக ,  கொல்கத்தா மாநகருக்கு வந்திருந்தார். கொல்கத்தா நகரில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த மெஸ்ஸிக்கு, ஒரு கசப்பான அனுபவம் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. மெஸ்ஸியை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கொல்கத்தா மைதானத்தில் குவிந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு போதுமான அளவில் முன்னேற்பாடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக இல்லாததால் , திடீரென்று ரசிகர்கள் நாற்காலிகளை உடைத்து தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

மெஸ்ஸியின் இந்திய பயணம்  சிறப்பானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் ஆரம்பத்திலேயே இந்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுக்க கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமே ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர் என்பது உலகம் அறிந்தது தான். ஆனால் ,மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் கிரிக்கெட்டிற்கு பதில் கால்பந்து போட்டிகள் தான் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. நாட்டிலேயே அதிக அளவில் கால்பந்து ரசிகர்கள் கொல்கத்தாவில் தான் உள்ளனர். 

இந்நிலையில் கொல்கத்தா நகரின் விவேகானந்தா யுவபாரதி மைதானத்தில் மெஸ்ஸி கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிக்காக , விழா ஏற்பாட்டாளர்கள் பல்லாயிரம் ரூபாய் விலையில் டிக்கெட்டுகளை விற்றனர். மெஸ்ஸியை ஒரு முறையாவது பார்த்துவிடலாம் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து டிக்கெட்டுகளை வாங்கி மைதானத்தில் காத்திருந்தனர். மைதானத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்தன. 

இந்தச் சூழ்நிலையில் மைதானத்திற்குள் நுழைந்த மெஸ்ஸியை அரசியல்வாதிகளும் சில முக்கிய பிரபலங்களும் சூழ்ந்து கொண்டு இருந்ததால் , ரசிகர்கள் அவரை பார்க்க முடியாமல் தவித்தனர். அப்போது ரசிகர்கள் மெஸ்ஸியை பார்க்க வேண்டும் என்று முதலில் கூச்சல் போட ஆரம்பித்தனர். விழா ஏற்பாட்டளர்கள் இதைப்பற்றி கவனம் எதுவும் செலுத்தாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கோவம் அடைந்த ரசிகர்கள் தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.


 கோபமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் உள்ள நாற்காலிகள் எல்லாம் உடைக்க ஆரம்பித்தனர். தங்கள் கைகளில் இருந்த தண்ணீர் பாட்டில்கள் , உடைக்கபட்ட சேர்கள், செருப்புகள் ஆகியவற்றை மைதானத்தின் நடுவில் வீச ஆரம்பித்தனர். ஆத்திரமடைந்த ரசிகர்கள் உடனடியாக மைதானத்தில் இருந்த தடுப்புக்கட்டைகளை உடைத்துக் கொண்டு முன்னேற முயன்றனர். பொருட்கள் எல்லாம் வீசப்பட்டதை பார்த்த மெஸ்ஸியின் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவரை சூழ்ந்து கொண்டனர்.

​ரசிகர்களின் ஆவேசத்தால் மெஸ்ஸியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அவர் மைதானத்தை ஒருமுறை வலம் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பாட்டில்கள் வீசப்பட்டதால் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு அவரைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் அமைத்தனர். நிலைமை மோசமாவதை உணர்ந்த அவர், நிகழ்ச்சியைப் பாதியிலேயே ரத்து செய்துவிட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வெளியேறினார்.

இதனால், ​சவுரவ் கங்குலி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் மெஸ்ஸி கலந்துக் கொள்ளும் நிகழ்ச்சிகள் தடைபட்டது. "அவர்(மெஸ்ஸி ) இனி வர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்"  என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா அங்கிருந்தவர்களிடம் கூறியது ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியது. மெஸ்ஸி அங்கிருக்க விரும்பாததால், உடனடியாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com